பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

15


கண்டு - தம் கல்வியால் தாம் இன்புறுவதொடு உலகமும் இன்புறுவது கண்டு; காமுறுவர் - மேன்மேலும் கற்கவும் கற்பிக்கவும் விரும்புவர்.

தாமின்புறுதலாவது, நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளாலும், தாம் இம்மையிற் பெறும் புகழ் பொருள் போற்றுதலாலும், மறுமையிற் பெறும் நற்பத நம்பிக்கையாலும், இடையறாது மகிழ்தல். உலகின்புறுதலாவது, இன்று செவிக்கினிய சிறந்த விருந்துண்டோ மென்றும், அறியாத பல அரும் பொருள்கள் எளிதாயறிந்தோம் என்றும், இத்தகைய சொற்பொழிவு கேட்டது எம் தவப்பேறேயென்றும், இன்னுஞ் சிலமுறை கேட்பின் யாமும் புலவராய் விடுவே மென்றும், பாராட்டி மகிழ்தல். தாமின்புறுவதை உலகு மின்புற்றுப் போற்றுவது, கரும்பு தின்னக் கைக்கூலி கொடுத்தாற் போன்று ஊக்குவதால், மேலுங் காமுறுவர் என்றார்.

இனி, இக் குறளை, கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு உலகு இன்புறக் காமுறுவர் என்று, கொண்டுகூட்டுப் பொருள்கோள் நடையாக மாற்றின், கண்டு என்னுஞ் சொல்லொடு பொருந்தாமையால், அது ஆசிரியர் கருத் தன்றென விடுக்க.

400. கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.

(இ-ரை.) ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி - ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல - மற்றப் பொருட்செல்வங்க ளெல்லாம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்து போந் தன்மையன வாதலின் சிறந்த செல்வங்களாகா.

கல்வியின் கேடின்மையை,

"வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்த ராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வ தேனோ?'

என்னும் பழந்தனியனால் அறிக. கல்விச் சிறப்பு அறிவொழுக்கமும் அரசனாலும் மதிக்கப்பெறுதலும் மறுமையில் நற்பதப்பேறுமாம்.