பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

17



என்றது பாண்டி விளையாட்டை. கல்லையாவது ஓட்டையாவது தேய்த்து வட்டமான சில்லமைப்பதற்கு நேரஞ் செல்லுமாதலின், பக்கத்திற் கிடந்த நெல்லிக்காயை யெடுத்து வட்டாடியிருக்கின்றனர்.

“கையாடு வட்டிற் றோன்றும்” (அகம். 104)

என்றது சூதாட்டைக் குறித்தது. ஈராட்டிலும் அரங்கின்றி வட்டாடல் இயலாது. அதுபோற் கல்வியறிவின்றிக் கற்றோரவையிற் பேசுதல் இயலாதென்பது கருத்து.

அரங்கு,வட்டு, கோட்டி என்னும் மூன்றும் தூய தென்சொற்கள் என அறிக. பின்னிணைப்புப் பார்க்க.

அர் – அறு - அறை. அர் - அரம் = தேய்த்து அறுக்குங் கருவி. அரம் - அரமு - அரவு - அராவு. அரம் - அரம்பு - அரம்பம் = அராவியறுக்கும் வாள். அரம்பம் - ரம்பமு (தெ.).

அரம் - அரங்கு - 1. அறுக்கப்பட்ட கட்டடப்பகுதி (room). 2. அறுக்கப் பட்ட விளையாட்டுக் கட்டம். 3. சூதாட்டுக்கட்டம். 4. முதற்காலத்தில் ஆடுதற்கு வரையறுக்கப்பட்ட சதர இடம், 5. சதரமேடை. 6. நாடக மேடை 7. முத்தமிழ்ப்புலவர் தத்தம் திறங் காட்டி ஒப்பம்பெறும் மேடை. அரங்கேற்றம் என்னும் வழக்கை நோக்குக.

அரங்கு - அரங்கம். 'அம்' பெருமைப்பொருள் பின்னொட்டு (Augumentative suffix). அரங்கம் = 1. நாடகமேடை. 2. சூதாடுமிடம். 3. படைக்கலம் பயிலுமிடம். 4. போர்க்களம். 5. நீரால் அறுக்கப்பட்ட ஆற்றிடைத்திட்டு. 6. திருவரங்கம் ஸ்ரீரங்க (வ). அரங்கம் - ரங்க (வ).

காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட ஆற்றிடைக்குறை,, திருமால் கோயிலையுடைமையால் திருவரங்கம் எனப்பெற்றது. 'திரு' தூய்மை அல்லது தேவியல் உணர்த்தும் முன்னொட்டு அல்லது அடைமொழி.

வடமொழியில் அரங்கு என்ற வடிவில்லை. ஆரியர் இந்தியாவிற்கும் தென்னாட்டிற்கும் வருமுன்னரே. பாண்டியர் எழுவரும் ஐவரும் முறையே முதலிரு கழகங்களிற் பாவரங்கேறி யிருந்தனர்.