பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

19



2. பேச்சு. "வீரக்கோட்டி பேசுவார்" (கம்பரா. உயுத். மாயா. 13)

வடமொழியாளர் கோட்டி யென்னுஞ் சொல்லைக் கோஷ்டீ (kosti) என்று திரித்து, கோஷமிடும் (ஆரவாரிக்கும்) கூட்டம் என்று பொருளுங் பொருட்கரணியமுங் கூறுவர். தமிழில், கோட்டிகொளல் என்பது அறிவு கொளுத்துதலை மேற்கொள்ளுதல் அல்லது அவைக்கண் உரையாற்றுதலைக் குறிக்குமேயன்றி ஆரவாரிப்புக் கூட்டத்தைக் கொள்ளுதல் என்று பொருள்படாது. அங்ஙனம் வடவர் கூறும் பொருளையே கொள்ளினும், அன்றும் அது தென்சொல்லாகுமேயன்றி வடசொல்லாகாது.

கொள்ளுதல் = 1. ஒத்தல், "வண்டினம் யாழ்கொண்ட கொளை" (பரிபா. 11 : 125).

2.பொருந்துதல். "கொள்ளாத கொள்ளா துலகு" (குறள். 470).

கொள் - கொள்ளை = கூட்டம். "கொள்ளை யிற்பலர் கூறலும் (கந்தபு. விண்குடி. 14).

கொள் - கோள் = குலை. "செழுங்கோள் வாழை" (புறம். 168). கோள் - கோடு = குலை (பிங்.). கோடு - கோடகம் = பல தெருக்கூடுமிடம் (பிங்.)

கோட்டி = 1. ஒருவரோடு கூடியிருக்கை. “தன்றுணைவி கோட்டியினீங்கி" (சீவக. 1035). 2. கூட்டம் (பிங்.).

கோஷிப்பது என்னும் பொருளினும் கூடுவது என்னும் பொருளே கூட்டம் என்று பொருள்படும் சொற்கு ஏற்றதாயிருத்தல் காண்க. ஆரவாரிப்பது கல்லார் திரளும் கலகக் கூட்டமேயன்றி, ஆன்றவிந்தடங்கிய சான்றோரவையாகாது.

402. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று.

(இ-ரை.) கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்ற அற்று - இயல்பாகவே முலையிரண்டுமில்லாத பேடி பெண்டன்மையை விரும்பினாற்போலும்.

“பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் ...................................... இவ்வென அறியும் அந்தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்." (தொல்.487)