பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

23



மாத்திரை என்பதன் அடிப்படைப் பொருள் அளவு என்பதேயென்று அறிந்து கொள்க. மாத்திரம் - மாத்ர (வ.), மாத்திரை - மாத்ரா (வ) metrum (L.) metron (Gk.), meter (E.) என்னும் மேலையாரியச் சொற்கள் metre (மதி = அளவிடு) என்னும் முதனிலையினின்று திரிந்தவை.

407. நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம் மண்மாண் புனைபாவை யற்று.

(இ-ரை.) நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களையும் நுணுகிக் கற்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; மண் மாண் புனைபாவை அற்று - கண்ணச் சாந்தினால் மாட்சிமைப்படப் புனைந்தமைந்த படிமையின் எழுச்சியும் அழகும் போலும்.

நுண்மாண் நுழைபுலத்தின் தன்மையாவது, அறிதற்கரிய நிரடான பொருளையறிதலும் சிக்கலான செய்தியை விரைந்து விடுவித்தலுமாம். ‘பாவை’ ஆகுபொருளது. எண்பேரெச்சமின்றிப் பிறப்பது போன்றே "உருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிது” (சீவக. முத்தி. 154). ஆயினும், கல்வி யறிவில்லாதவழி அதனாற் சிறப்பில்லை யென்பதாம். “ஆடையில்லாதவன் அரைமாந்தன், கல்வி யில்லாதவன் கால்மாந்தன்" என்பது ஒரு சொலவடை.

408. நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு.

(இ-ரை.) கல்லார்கண் பட்ட திரு - கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்; நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே - கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதேயாம்.

"இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி னின்மையே யின்னா தது." (குறள்.1041)

ஆயினும், நல்லார் வறுமை அவர்க்குமட்டுந் தீங்கு செய்ய, கல்லார் செல்வம் அவர்க்கும் பிறர்க்கும் தீங்கு செய்தலின், முன்னவர் வறுமையினும் பின்னவர் செல்வம் தீயதென்றார். ஏகாரம் தேற்றம், 'கண்பட்ட' என்னுஞ் சொல்லாட்சி செல்வமும் வறுமையும் இடமாறி நின்றமையை உணர்த்தும்.