பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28

திருக்குறள்

தமிழ் மரபுரை



இழிவுசிறப்பின் பாற்பட்ட ஒத்துக்கொள்வு (concessive) உம்மை, கற்றிருத்தல் வேண்டுமென்னுங் குறிப்பினது.

"கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு." (நாலடி.139)

தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம். 'ஊற்று' முதனிலை திரிந்த தொழிலாகுபெயர். 'அஃதொருவற்கு' என்பது 'அதுவொருவற்கு என்றிருந்திருத்தல் வேண்டும்.

“அன்பீனு மார்வு முடைமை யதுவீனும்”, (74)

“ஈத லிசைபட வாழ்த லதுவல்ல(து)”, (231)

"பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்(து)”, (533)

“கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல (து)”, (570)

“கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்" (1144)

என்னும் அடிகளை நோக்குக.

415. இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே யொழுக்க முடையார்வாய்ச் சொல்.

(இ-ரை.) ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - ஒழுக்கமுடைய பெரியோர் வாய்ச்சொற்கள்; இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே - வழுக்கும் சேற்றுநிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல, உலகில் வாழ்க்கை நடத்துவோர்க்கும் ஆட்சி செய்வோர்க்கும் துன்பக் காலத்தில் உதவுந் தன்மையவே.

ஒழுக்க மில்லாதார் கல்வியுடையாரேனும் அன்பிலராதலின், அவர் வாய்ச்சொல் பயன்படாதென்பது தோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார். வாய் என்றது தீச்சொல் வந்தறியாமை யுணர்த்தி நின்றது. இனி, வாய்ச்சொல் என்பது தப்பாது பயன்படும் வாய்மைச்சொல் எனினுமாம். ஏகாரம் தேற்றம்.