பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

29



முந்தின குறளிற் பொதுப்படக் குறிக்கப்பட்ட கேள்வியறிவைப் பெறுமிடம் இங்கு வரையறுக்கப்பட்டது.

416. எனைத்தானு நல்லவை கேட்ட வனைத்தானு மான்ற பெருமை தரும்.

(இ-ரை.) எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் எத்துணைச் சிறிதாயினும் நற்பொருள்களைக் கேட்டறிக; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக் கேள்வியறிவு அத்துணைச் சிறிதாயினும் நிறைந்த வலிமை பெற ஏதுவாகும்.

எனைத்து அனைத்து என்னும் அளவுச் சொற்கள் பொருளளவுங் கால அளவும்பற்றியன. 'ஆனும்' என்பது ஆயினும் என்பதன் மரூஉ. "பலதுளி பெருவெள்ளம்" ஆவதுபோல் பல அறிவுத்துணுக்குகள் திரண்டு பேரறிவாவதுடன் ஒரே அறிவுக்குறிப்பு ஒரோவழி உயிரைக் காப்பதும் பெருவெற்றி தருவது முண்டு. ஆதலால், கேள்வியறிவின் சிற்றளவுபற்றி இகழக்கூடாது என்பதாம்.

417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்.

(இ-ரை.) இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன் மேலும் பல்வேறு வகையில் திரண்ட கேள்வியறிவினை யுடையார்; பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - ஏதேனுமொரு பொருளைத் தவறாக உணர்ந்த விடத்தும். தமக்குப் பேதைமையூட்டுஞ் சொற்களைப் பிறர்க்குச் சொல்லார்.

கல்வி கேள்வி யென்னும் இருவழியாலும் அறிவு நிரம்பியவர் ஒன்றைப் பிறழவுணர்ந்த விடத்தும், பொருத்தமாகச் சொல்வர் அல்லது சொல்லாமலே விட்டுவிடுவர் என்பது கருத்து. பிழைத்துணர்தல் பிழையாக வுணர்தல், ‘பேதைமை’ ஆகுபொருளது. மயக்க நிலையிலும் பிறழா துரைப்பர் என்பதற்கு, 'பிழைத்துணர்ந்தும்' என்னும் தொடர் இடந்தராமை காண்க.