பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

திருக்குறள்

தமிழ் மரபுரை



418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி.

(இ-ரை.) கேள்வியால் தோட்கப்படாத செவி கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலனுக் கேற்ப ஓசையொலிகளைக் கேட்குமாயினும் செவிடாந் தன்மையனவே.

ஐம்பொறிகளின் சிறந்த பயன் அறிவுப்பேறாதலின், கேள்வியறிவிற் கேட்காத செவிகள் 'கேளாத் தகைய' என்றும், கேள்வியறிவு புகுதற்கு இயற்கைத் துளையினும் வேறான நுண்டுளை வேண்டியிருத்தலின், கேள்வியால் தோட்கப்படாத செவி' என்றும், கூறினார். ஏகாரம் தேற்றம்.

419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது.

(இ-ரை) நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணிதாகிய கேள்வியறி வில்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிவான சொற்களையுடைய ராதல் இயலாது.

பொருளின் நுண்மை கேள்விமேலும் சொல்வார் பணிவு வாயின் மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. கேள்வி என்பதைக் கேள்வியறிவென்று கொள்ளின் ஏற்றுரை வழக்காகாது. 'வாய்' ஆகுபெயர். கேள்வி வாயிலாக அறிவு நிரம்பாதார் செருக்கித் தற்புகழ்ச்சி செய்வர் என்பது கருத்து. 'அல்லால்' என்பது பாடவேறுபாடு.

420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென்.

(இ-ரை.) செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - மேனிலை மாந்தர்போல் செவியால் நுகரப்படும் அறிவுப் பொருள்களின் சுவைகளை யுணராது: வாயால் நுகரப்படும் உணவுப் பொருள்களின் சுவைகளைமட்டும் உணரும் கீழ்நிலை மாந்தர்; அவியினும் வாழினும் என் - சாவதினால் உலகிற்கு என்ன இழப்பு? வாழ்வதனால் அதற்கென்ன பேறு?

செவியால் நுகரப்படுஞ் சுவைகள் இசைச்சுவை, சொற்சுவை, பொருட்சுவை என மூன்றாம். அவற்றுள் இசைச்சுவை சொல்லல்லாது ஓசையாக மட்டுமுள்ள கருவியிசையும் மிடற்றிசையும் என இருவகைப்படும்; சொற்சுவை தொடையும் வண்ணமும் அணியும் என மூவகைப்படும்; பொருட்