பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

31



சுவை மெய்ப்பாடும் அணியும் என இருவகைப்படும். மெய்ப்பாடுகள் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி, சமந்தம் (சமநிலை) எனத் தொண்டாம் (ஒன்பதாம்). இவை யெல்லாம் தொண்சுவை யென்றும், இறுதி நீங்கலாக எண்சுவை யென்றும், சொல்லப் பெறும். அணிகள் உவமை, உருவகம் முதலியனவாக அறுபதிற்கு மேற்படுவன.

இசைச்சுவை ஐவகைப்பட்ட அஃறிணை யுயிர்களாலும் நுகரப்படுதலின், ஏனை யிரண்டும்போல் அத்துணைச் சிறந்ததன்றாம். ஆயின், சொல்லொடு கூடின் மிகச் சிறந்ததாம். சொற்சுவையினும் பொருட்சுவையே சிறந்ததென்பது சொல்லாமலே விளங்கும்.

சொற்சுவைகளுள் தொடை ஐந்து; வண்ணம் எண்ணிறந்தன; அணி வரையறைப்படாதன.

வாய்ச்சுவை கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என ஆறு. வாயுணவின் என்பது பாட வேறுபாடு.

அதி. 43 - அறிவுடைமை அதாவது, கல்வி கேள்விகளாலாய தெள்ளிய அறிவும் மதியுமுடைமை. அதிகார வொழுங்கும் இதனால் விளங்கும். அறிவு என்னும் சொல், அறிதல் (perception, knowing, understanding), அறிந்த செய்தி (knowledge), ஓதி (wisdom), மதி (intelligence) என்னும் நாற்பொரு ளுணர்த்தும். அவற்றின் சேர்க்கை இங்கு அறிவெனப்பட்டது.

421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண்.

(இ-ரை.) அறிவு அற்றம் காக்கும் கருவி - நிலவுலகில் வாழ்வார்க்கு. சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற் காக்குங் கருவியாம்; செறுவார்க்கும் அழிக்கல் ஆகா உள் அரண் - அதுவுமன்றிப் பகைவராலும் அழிக்க முடியாத உள்ளரணாம்.

காத்தல் முன்னறிந்து தடுத்தல். உள்ளரண் அகக்கரணக் கூறாகிய அரண்; உட்புகுந்தழிக்க முடியாத நுண்பொருள் வடிவினது.