பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

திருக்குறள்

தமிழ் மரபுரை



422.சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு.

(இ-ரை.) சென்ற இடத்தால் செலவிடா - மனத்தை அது சென்றவிடமெல்லாஞ் செல்லவிடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - தீய வழியை நீக்கி நல்ல வழியிற் செலுத்துவது அறிவாம்.

விடாது என்பது கடைக்குறைந்து நின்றது. செல்லுதல் என்னும் வினைக்கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'ஒரீஇ' சொல்லிசை யளபெடை இங்கு மனத்தைக் குதிரைபோற் கருத வைத்தது குறிப்புருவகம்.

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(இ-ரை.) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் - எப் பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும்; அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப் பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு.

தேவிகம் (சாத்துவிகம்); மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முக்குணங்களும் பெரும்பாலர்க்கு மாறிமாறி வருவதால், நற்பொருள் பகைவர் வாயினும் தீப்பொருள் நண்பர் வாயினும், சிறந்த பொருள் இழிந்தோர் வாயினும் இழிந்தபொருள் சிறந்தோர் வாயினும் கேட்கப்படுதலால், 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்குத்தொடர் பன்மை பற்றி வந்தது. வாய் என்பது சொல்லும் பொருட்கு ஏற்காமையுணர நின்றது. சொல்வாரை நோக்காது சொல்லும் பொருளையே நோக்கி, கொள்ளுவது அல்லது தள்ளுவது அறிவென்பதாம்.

424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.

(இ-ரை.) எண்பொருளவாகச் செலச் சொல்லி - பிறருக்குச் சொல்லும் போது அரிய பொருள்களையும் எளிய பொருள்களாக அவர்க்கு விளங்குமாறு சொல்லி; தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு - தான்மட்டும் பிறர்வாய்க் கேட்கும் அருஞ்சொற்களின் நுண்பொருளை எளிதாய் அறிந்து கொள்வது அறிவாம்.

பொருளை அறிவிக்கும் வாயில் சொல்லே யாதலாலும், அரிய பொருளை எளிதாக்குவதும் எளிய பொருளை அரிதாக்குவதும் சொல்லின்