பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

33


தன்மையைப் பொறுத்திருத்தலாலும், 'எண்பொருளவாகச் செலச் சொல்லி' என்றார். 'வாய்' ஆகுபெயர். அறிவு என்றது அறிவுடைமையை.

425. உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு.

(இ-ரை.) உலகம் தழீஇயது ஒட்பம் - உயர்ந்தோரை நட்பாகத் தழுவிக் கொள்ளுதல் நல்லறிவாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந் நட்பொழுக்கத்தில் வளர்தலுந் தளர்தலுமின்றி ஒருநிலைப்பட்டு உறுதியாய் நிற்றல் அறிவுடைமையாம்.

கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என்னும் நால்வகைப் பூக்களுள், நீர்ப்பூ ஒரு வேளை மலர்வதும் ஒரு வேளை குவிவதுமாக நிலை மாறுந் தன்மையது. ஏனை மூன்றும் மலர்ந்த பின் மீண்டுங் குவியாது ஒரே நிலையின வாவன. இங்ஙனம் ஒருநிலைப்பட்டிருப்பதையே 'மலர்தலுங் கூம்பலு மில்லது' என்றார். 'உலகம்' வரையறைப்பட்ட இடவாகுபெயர். ‘தழீஇயது‘ இன்னிசை யளபெடை. இதில் வந்துள்ளது ஒருமருங் குருவகம். மலர்தற்கும் கூம்பற்கும் செல்வ வறுமைகளும் கரணியமாகலாம்.

“கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்." (நாலடி.215)

426. எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு.

(இ-ரை.) உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம்.

உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப் பாதுகாப்புமாம்.

427. அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா ரஃதறி கல்லா தவர்.