பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையார் எதிர் காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர்.

முன்னறிதல் எண்ணியறிதலும் எண்ணாதறிதலும் என இருவகை. எண்ணியறிதல் பொதுவகைப்பட்ட அறிஞர் செயல்; எண்ணாதறிதல் இறைவனால் முற்காணியர்க்கு (Prophets) அளிக்கப்பட்ட ஈவு.

"பிற்பயக்குமது அறிவார் அறிவுடையா ராவார்" என்று மணக்குடவ பரிப்பெருமாளரும். "அறிவுடையவர் ஆகும் காரியம் அறிவார்" என்று பரிதியாரும், "உலகத்து அறிவுடையோர்...... தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவாரே” என்று காளிங்கரும் உரைப்பர். தமக்கு நன்மையாவதை அறிவது தன்னல வியல்பேயன்றி அறிவுடைமையாகாது.

428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில்.

(இ-ரை.) அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சுவது அறிவுடையார் செயலாம்.

அறங்கடையும் (பாவமும்) பழியும் அழிவும் அஞ்சப்படுவன. அவற்றை ‘அஞ்சுவது' என்றது வகுப்பொருமை. அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாமை போன்றே, அஞ்ச வேண்டாததற்கு அஞ்சுவதும் பேதைமையாம். இருட்டிடமும் நாட்டுப் போரும் அவைப் பேச்சும் அஞ்சவேண்டாதன, ‘அஞ்சாமை' பொருட்படுத்தாது செய்து துன்புறுதல் அல்லது கெடுதல். 'அஞ்சல்' பொருட்படுத்தித் தவிர்ந்து இன்புறுதல். அஞ்சுவதஞ்சல் அறிஞர் இயல்பென்றற்கு 'அறிவார் தொழில்' என்றார்.

முன்பு அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையால் (382). அதற்கு மாறான அஞ்சுவதும் அரகனுக் குண்டென்று இங்குக் கூறியவாறு.

429. எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.

(இ-ரை.) எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே யறிந்து தம்மைக் காக்கவல்ல அறிவுடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் அஞ்சி நடுங்குமாறு வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை.