பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

37



434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே யற்றந் தரூஉம் பகை.

(இ-ரை.) அற்றம் தரும் பகை குற்றமே - தனக்கு அழிவை உண்டாக்கும் பகை தன் குற்றமே; குற்றமே பொருளாகக் காக்க - ஆதலால் தன்னிடத்துக் குற்றம் வராமையையே பொருட்டாகக் கொண்டு காத்துவருக.

கரணகத்தை (காரணத்தை)க் கருமமாக (காரியமாக)ச் சார்த்திக் கூறுவது மரபாதல்பற்றி, குற்றத்தைப் பகையென்றார். காம வெகுளி கடும் பற்றுள்ளமான வுவகை செருக்குகளை அறுபகை (காஞ்சிப்பு. திருமேற்.6) என்பது போன்றே, காமவெகுளி மயக்கங்களை முப்பகை என்று கம்பர் கூறுதல் காண்க.

"மொழிந்தன ராசிகள் முப்பகை வென்றார்" (கம்பரா. கார்முகம். 26)

குற்றங்கள் பகைவர்போற் கொல்லும் என்பதை,

"அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது” (குறள்.165)

"தன்னையே கொல்லுஞ் சினம்” (குறள்.305)

என்பவற்றால் அறியலாம்.

இங்ஙனமிருப்பவும், "இவைபற்றி யல்லது பகைவர் அற்றந் தாராமையின், இவையே பகையாவன என்னும் வடநூலார் மதம்பற்றிக் 'குற்றமே யற்றந் தரூஉம் பகை' யென்றும்... கூறினார்.” 'குற்றமே காக்க' என்பது 'சினங் காக்க' (குறள். 305) என்பதுபோல் நின்றது. 'தரூஉம்' இசைநிறை யளபெடை.

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

(இ-ரை.) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காத அரசனது வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறுபோலக் கெடும் - அது நேர்ந்தவுடன் நெருப்புமுகத்து நின்ற வைக்கோற் போர்போல அழிந்துவிடும்.

குற்றம் என்பது அதிகாரத்தால் வந்தது. முன் - முன்னம் - முன்னர். குற்றத்தை அது வருமுன் காக்கவேண்டு மென்பதும், குற்றஞ் சிறிதாயினும் அதனாற் பேரிழப்பு விரைந்து நேருமென்பதும், உவமையாற் பெறப்பட்டன.