பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

திருக்குறள்

தமிழ் மரபுரை



436. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி னென்குற்ற மாகு மிறைக்கு.

(இ-ரை.) தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக் காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது? ஒன்றுமில்லை.

இது குடிகளின் வழக்குத் தீர்த்துத் தண்டித்தல்பற்றியது. பிறர் குற்றங் கண்டு தண்டிப்பவன் முன்பு தான் அக் குற்றமில்லாதவனாயிருத்தல் வேண்டும். அரசன் தன் குற்றத்தை நீக்காது பிறர் குற்றத்திற்குத் தண்டிப்பதே. குற்றமாம். அங்ஙன மன்றித் தன் குற்றத்தை நீக்கியபின் தண்டிப்பின் அது முறைசெய்தலாம். அது அவன் கடமையாதலால் 'என்குற்ற மாகும்' என்றார். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை.

437. செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும்.

(இ-ரை.) செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் பாதுகாப்பும்பற்றிச் செய்யவேண்டியவற்றைச் செய்துகொள்ளாது, அதனிடத்துப் பற்றுள்ளம் வைத்த அரசனின் செல்வம்; உயற்பாலது அன்றிக் கெடும் - அழிவிற்குத் தப்பி எஞ்சியிருக்குந் தன்மையின்றி வீணே கெடும்.

செல்வத்தாற் செயற்பாலன அறம்பொரு ளின்பங்கள்.

"அறனும் பொருளு மின்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம் ஆற்றா மைநிற் போற்றா மையே" (புறம்.28)

என உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியிருத்தல் காண்க,

வளமைக் காலத்தில் அறவோர்க்கும் துறவோர்க்கும் வழக்கமாக அறப்புறம் விடுவதுடன், வறட்சிக் காலத்தில் வந்தவர்க்கெல்லாம் பருப்புச்சோறு, தயிர்ச்சோறு, எலுமிச்சஞ்சோறு. ஊன்சோறு முதலிய சோற்றுருண்டை வழங்கும் சிறுசோற்று விழாவும் அறத்தின்பாற் படுவதாம்.

"சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம்.235)