பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40

திருக்குறள்

தமிழ் மரபுரை



கெடுதல் கள்வராலும் பகைவராலுங் கொள்ளப்படுதலும் மக்கிப் போதலும் வெள்ளத்தாலழிதலும். உயற்பாலதின்றி என்றும் பாடம்.

438. பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப் படுவதொன் றன்று.

(இ-ரை.) பற்றுள்ளம் என்னும் இவறன்மை - பொருளைச் செலவிட வேண்டிய விடத்துச் செலவிடாது. தன்னுடனேயே வைத்துக்கொள்ளுமாறு. உள்ளத்தால் அதை இறுகப்பற்றும் கஞ்சத்தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - பிற குற்றங்களோடு சேர்த்தெண்ணப்படாது தனியாத வைக்க வேண்டிய ஒரு குற்றமாகும்.

கஞ்சத்தனம் எல்லா நற்குணங்களையும் அடக்கி அவற்றைப் பயன்படாவாறு செய்ய விடுதலின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது 'எற்றுள்ளும்' என இடைக்குறைந்து நின்றது.

439. வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

(இ-ரை.) எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - அறிவாற்றல்களிலும் இடம்பொரு ளேவல்களிலும் தான் மிக வுயர்ந்தபோதும் தன்னை மெச்சிச் செருக்குறா தொழிக; நன்றி பயவா வினை நயவற்க - தனக்கும் தன் நாட்டிற்கும் நன்மை தராத செயல்களை மானத்தினாலேனும் செருக்கினாலேனும் இன்பங்கருதியேனும் விரும்பாதொழிக.

அரசன் தன்னை வியந்தவிடத்து, காலம் இடம் வலி முதலியனபற்றித் தன்னைப் பகைவருடன் ஒப்புநோக்கி ஏற்றத்தாழ்வறிய வாய்ப்பின்மை யானும், அறமும் பொருளும் கவனிக்கப்படாமையானும், முற்காப்பும் விழிப்பும் இல்லாது போதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும்; தான் கருதியதை முடித்தே விடுவதென்னும் ஆணவத்தால் அறம்பொரு ளின்பம் பயவா வினைகளை மேற்கொள்ளின், அவற்றாற் கரிசும் (பாவமும்) பழியும் கேடுமே விளையுமாகலின் அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார்.

தன்னை வியந்து கெட்டவர்க்குப் பொதுவியலில் வில்லிபுத்தூராழ்வாரும், வேத்தியலில் அரச அதிகாரம் பூண்ட விசயநகர அமைச்சர் இராமராயரும் எடுத்துக்காட்டாவர்.