பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

41



440. காதல காத லறியாமை யுய்க்கிற்பி னேதில் வேதிலார் நூல்.

(இ-ரை.) காதல காதல் அறியாமை யுய்க்கிற்பின் - ஒருவன் தான் பித்துக்கொள்வது போலும் பெருவிருப்புக்கொண்ட பொருள்களையும் துறை களையும் தன் பகைவர்க்குத் தெரியாதவாறு நுகரவும் கையாண்டின் புறவும் வல்லனாயின்; ஏதிலார் நூல் ஏது இல - அப் பகைவர் தன்னை வஞ்சித்தற்குச் செய்யுங் சூழ்ச்சி ஏதும் பயனற்றதாய்ப் போம்.

தான் காதலித்தவற்றைத் தன் பகைவர் அறியாதவாறு மறைவாக நுகரின், அவர் தன்னைக் கெடுக்கும் வாயிலின்மையால் வஞ்சிக்கப்படான் என்பதாம். காதலிக்கப்படும் பொருள்கள் காமம், கள், வேட்டை, மதவெறி, யானைப்போர், ஏறுதழுவல் முதலியனவாம். அரசன் இவற்றுள் தன் அரண்மனைக்குள் நுகரக் கூடியவற்றை அதனுள்ளும், கூடாதவற்றை மாறுகோலம் பூண்டும் தக்க மெய்காப்பொடு வெளியேறியும் நுகர்தல் வேண்டும். சூது முற்றுங் கடியப்படுங் குற்றமாதலின் அது தனியதிகாரத்திற் கூறப்படும். பொது மக்கட்காயின் தகர்ப்போர். சேவற்போர், காடைப்போர் முதலியனவும் காதலவாகும்.

ஏதும் தொடர்பில்லாத அயலாரைக் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்கு ஏதும் அன்பில்லாத பகைவரைக் குறித்தது. நூல் என்பது நூலறிவாற் செய்யப்படும் சூழ்ச்சியைக் குறித்தலின் கருவியாகுபெயர். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை.

அதி. 45 - பெரியாரைத் துணைக்கோடல் அதாவது,

"-கொண்டபே

ராற்றலுடையார்க்கு மாகா தளவின்றி யேற்ற கருமஞ் செயல்.” (மூதுரை, 11)

ஆதலின், ஐவகையும் அறுவகையுமான குற்றங்களைத் தன்கண் நீக்கிய அரசன், தன் ஆட்சியைக் குற்றமின்றிச் செவ்வையாக நடாத்துதற்கு, இயற்கை மதிநுட்பத்தோடு நூலறிவும் சூழ்ச்சித் திறனும் தூய வொழுக்கமு முடைய பெரியாரைத் தன் அமைச்சராகத் துணைக்கொள்ளுதல். அதிகார முறைமையும் இதனால் அறியப்படும்.