பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46

திருக்குறள்

தமிழ் மரபுரை



முட்டுக்கொடுத்துத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் ஏற்படும் நிலைபேறும் இல்லை.

ஊதியப் பேற்றிற்கு முதலீடு போல அரசு நிலைபேற்றிற்கு அமைச்சுத்துணை இன்றியமையாத தென்பதாம். இதில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை யணி. பொருளாக வந்த தொடர் ஒருமருங் குருவகம். ஆகவே, இணையணியாம்.

450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.

(இ-ரை.) நல்லார் தொடர்கை விடல் - அரசன் நற்குணச் செல்வரான பெரியாரொடு நட்பை விட்டுவிடுதல்; பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே - தான் ஒருவனாக நின்று பலரொடு பகை கொள்வதினும் பதின்மடங்கு தீமை விளைப்பதே.

ஒருவன் பகைவர் பலராயினும், அவரைப் பிரித்தல், ஒருவரோ டொருவரை மோதுவித்தல், சிலரைத் தனக்கு நட்பாக்கல் முதலிய வலக்காரங்களைக் கையாண்டு கேட்டிற்குத் தப்புதல் கூடும். ஆயின், நல்லார் தொடர்பை விடுபவரோ ஒருவகையாலும் தப்ப வழியின்மையின். இது அதனினும் மிகத் தீது என்பதாம். ஏகாரம் தேற்றம்.

அதி. 46 - சிற்றினஞ் சேராமை அதாவது, சிறியோர் கூட்டத்தொடு கூடாமை. சிறியோராவார், கயவரும் ஐங்குற்றவாளியரும் (காமுகரும் கட்குடியரும் கவறாடுவோரும் கரவடரும் கொலைஞரும்) தன்னலக்காரரும் கல்வி நிரம்பாதவரும் உயர்ந்தோர் உண்டென்பதை இல்லையென மறுப்போருமாவர். சிறியோர் சேர்க்கையால் அறிவும் ஒழுக்கமும் திரிந்து இம்மையும் மறுமையுங் கெடுவதால், பெரியார் துணை இல்லாது போகுமென்பதையும், இருப்பினும் பயன்படாதென்பதையும், உணர்த்தற்கு இது பெரியாரைத் துணைக்கோடல் என்பதன் பின் வைக்கப்பட்டது.

451. சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.