பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54

திருக்குறள்

தமிழ் மரபுரை



முடியாதவாறு அடர்ந்திருக்கும் நாற்றுகளைப் பறித்துப் பாத்தியுள் இடை விட்டு நட்டு, நன்றாய் வளரச் செய்தலை யொக்கும் என்றார்.

466. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.

(இ-ரை.) செய்தக்க அல்ல செயக்கெடும் - அரசன் தன் வினைக்குச் செய்யத் தகாதனவற்றைச் செய்யின் கெடுவான்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் - இனி, அதற்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமை யானுங் கெடுவான்.

செய்யத்தகாதன வாவன: ஆகா வினையும் பயனில் வினையும் சிறுபயன் வினையும் தெளிவில் வினையும் துயர்தரு வினையும் கெடுதல் வினையுமாம். செய்யத்தக்கன இவற்றின் மறுதலையாம். இவ் விருவகை வினைகளையும் முறையே செய்தல் செய்யாமையால், அறிவு ஆண்மை படை அரண் பொருள் ஆகிய ஐவகை ஆற்றல்களுள் இறுதி மூன்றும் ஒடுங்கிப் பகைவர்க் கெளியனாவ னாதலால், இரண்டுங் கேட்டிற்கேதுவாம். செய்யத்தக்க என்பது செய்தக்க எனக் குறைந்து நின்றது. இனி,

"பெருஞ்செய் யாடவர்" (நெடுநல்.171)

என்பதிற்போலச் செய் என்பது செய்கை என்று பொருள்படும் தொழிற்பெயர் என்றுமாம்.

467. எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு.

(இ-ரை.) கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க வினையையும் வெற்றியாக முடிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து தொடங்குக; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கியபின் எண்ணுவோ மென்று கடத்திவைப்பது குற்றமாம்.

துணிதல் தீர்மானித்துத் தொடங்குதல். அரசர்க்குரிய தொழில்கள் ஆறு. அவையாவன:

"ஒதல் பொருதல் உலகு புரத்தல் ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில்.” (பிங்.5:42)