பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58

திருக்குறள்

தமிழ் மரபுரை



அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - அம் முயற்சியில் உறுதியாக மனத்தை யூன்றிப் பகைமேற்செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல் - முடியாதது ஒன்றும் இல்லை.

'ஒல்வது' எனவே நால்வகை வலியும் அடங்குதலின், 'அறிவது’ என்றது மேற்கொண்டு ஒற்றர் வாயிலாகப் பகைவர் நிலைமையைப்பற்றி அறியக் கூடிய புதுச் செய்திகளாகும். 'செல்லாததில்' எனவே வெற்றி உறுதி என்பதாம்.

473. உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி யிடைக்கண் முரிந்தார் பலர்.

(இ-ரை.) தம் உடை வலி அறியார் - தம்முடைய உண்மையான வலியளவைச் சரியாக அளந்தறியாது; ஊக்கத்தின் ஊக்கி - தம் மனவெழுச்சி மிகையால் தம்மினும் வலியாரொடு போர்செய்ய முயன்று; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் தாக்குதலைப் பொறுக்கும் ஆற்றலின்றி இடையே கெட்டுப்போன அரசர் உலகத்திற் பலராவர்.

ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபாக வரும் உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம், உடை என்று குறுகி முன்பின்னாக முறைமாறி நின்றது. இனி, இடம் மாற்றாது உள்ளவாறே கொண்டு (தாம்) உடைய தம் என்று பொருள் கொள்ளினுமாம். உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் ஒரு தொடர்ச் சொல்லின் நிலைமொழியாகவும் வரும் என்பதை, உடைய நம்பி. உடைய பிள்ளையார், உடைய வரசு என்னும் வழக்கு நோக்கி யறிக. 'முரிந்தார் பலர்' என்பது உலகத்தில் அறிவுடையார் சிலர் என்பதை உணர்த்தும். முரிதல் என்னுஞ் சொல் முறிதல் என்னும் வடிவுங் கொள்ளும்.

474. அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை வியந்தான் விரைந்து கெடும்.

(இ-ரை.) அமைந்து ஆங்கு ஒழுகான் - வேற்றரசரோடு பொருந்தி அதற்கேற்ப நடந்துகொள்ளாமலும்; அளவு அறியான் - தன் வலியளவை அறியாமலும்; தன்னை வியந்தான் - தன்னை உயர்வாக மதித்து அவரொடு பகைகொண்ட வரசன்; விரைந்து கெடும் - விரைந்து கெடுவான்.

பகையின்றியே வேற்று நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றுவது, அக்காலத்திற் புகழ்வினையாகவும் சிறந்த அரசன் கடமையாகவும் கொள்ளப்பட்டதினால், ஓர் அரசன் தன் வலியறிந்து, அடுத்துள்ள நாட்டு அரசர் தன்னினும் வலியராயிருப்பின் அவரொடு நட்புக்கொள்ள