பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68

திருக்குறள்

தமிழ் மரபுரை



எண்ணம் இழப்பர் - அவரை முன்பு வெல்ல எண்ணியிருந்த பகைவர் அவ் வெண்ணத்தையும் இழப்பர்.

துன்னிச் செய்தல் தாம் வெற்றிபெறுமளவும் தம் இடத்தைவிட்டு அகலாது நின்று பொருதல். 'எண்ணம்' என்றது தாம் வெல்ல வகுத்த திட்டத்தை. முழுக்கவனமும் முயற்சியும் தற்காப்புப்பற்றியே யிருத்தலால், வெற்றியை யிழப்பது மட்டுமன்றி வெல்ல வகுத்த திட்டத்தையும் அடியோடு மறப்பர் என்பார் 'எண்ணமிழப்பர்' என்றார்.

இந் நான்கு குறளாலும், பகைவரரணின் புறத்து நின்று பொரும் உழிஞைப் போரரசர் அதற்கான இடமறிதல் கூறப்பட்டது.

495. நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி னீங்கி னதனைப் பிற.

(இ-ரை.) முதலை நெடும்புனலுள் (பிற) வெல்லும் - முதலை தன் வாழிடமாகிய ஆழநீர் நிலையுள் யானையுட்படப் பிறவுயிரிகளையெல்லாம் வென்று விடும்; புனலின் நீங்கின் அதனைப் பிற அடும் - அந் நீர்நிலை யினின்று நீங்கின் அதனின் வலிகுன்றிய உயிரிகளும் அதனை வென்றுவிடும்.

நிலத்தில் வாழும் பிற வுயிரிகட்கெல்லாம் நிலைக்கும் நீரில் எளிதாய் இயங்கவும் நிலைக்கா நீரில் நிற்கவும் இயலாமையின், அவற்றையெல்லாம், ஆழநீரில் இயற்கையாய் வாழ்வதும், எளிதாய் நீந்துவதும், முப்பதடிவரை நீண்டு வளர்வதும், கரடுமுரடான பாறை போன்ற முதுகுள்ளதும், யானைக் காலையும் எளிதாய்க் கௌவுமாறு அகன்று விரியும் கூர்ம்பல் அலகுகள் வாய்ந்ததும், வலிமை மிக்க வாலுடையதுமான முதலை எளிதாய் நீர்க்குள் இழுத்தமிழ்த்திக் கொன்றுவிடும். ஆயின், அத்தகைய முதலை ஈரிடவாழி (amphibian) எனப்படினும். அதற்கு நிலத்தில் எளிதாய் இயங்கும் வலிமையுள்ள கால்களின்மையால், அதனினும் வலிகுன்றிய நிலவாழிகள் அதனை நிலத்தின்கண் எளிதாய் வென்றுவிடும்.

இது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்கலாற்றா இடஞ்சென்று பொருவராயின் அவரை வெல்வ ரென்பதும், தாம் நிற்கலாற்றா இடஞ்சென்று பொரின் அவரால் வெல்லப்படுவர் என்பதும், உணர்த்துகின்றமையின் பிறிதுமொழிதலணியாம். "தன்னூர்க்கு யானை, அயலூர்க்குப் பூனை என்பது இங்குக் கவனிக்கத் தக்கது. பகைவர்க்கு ஊற்றமில்லாத இடஞ் சென்று பொருக என்பது கருத்து. பிற என்பது முன்னுங் கூறப்பட்டது.