பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

71



மின்மையானும் உயிரைப் பொருட்படுத்தாது ஊன்றிப் பொருவர். அதனாற் பெரும்படையும் அவர்க்கு உடையும் என்பதாம். "ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும்" என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

500. காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா வேலாண் முகத்த களிறு.

(இ-ரை.) கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கும் யானை மறவர்க்கும் அடங்காதனவாய்ப் போர்க்களத்தில் வேன்மறவரைக் கோட்டாற் குத்திக் கோத்த மதயானைகளையும்: கால்ஆழ் களரின் நரி அடும் - அவை காலமிழும் சேற்றுநிலத்தில் அகப்பட்டவிடத்து மிகச் சிறிய நரிகளும் அவற்றைக் கொன்றுவிடும்.

'வேலாழ் முகத்த' என்று மணக்குடவர் பாடங்கொள்வர். வேல் பதிந்த முகத்தனவாயின், அவை மேலும் வலிகுன்றி நரிகொல்வதற் கேதுவாக முடியுமாதலின், அது பாடமன்றாம். முகம் ஆகுபொருளது. களிறு மதங் கொண்ட ஆண்யானை. கள் - களி - களிறு. களி கள்வெறி போன்ற யானை மதம். இழிவுசிறப்பும்மையும் உயர்வுசிறப்பும்மையும் செய்யுளால் தொக்கன. பெரும்படையுடைய பேரரசரும் தமக்கேற்காத இடத்துச் சென்று பொரின், மிக எளியவராலும் வெல்லவுங் கொல்லவும் படுவர் என்னும் உட்பொருள் தோன்ற நின்றமையின், இதுவும் பிறிதுமொழிதல் அணி, இம் மூன்று குறளாலும், பகைமேற் சென்று தாக்கலாகா இடங்களும் தாக்கின் நேருந் தீங்கும் கூறப்பட்டன. இவை நொச்சிப்போர் வெற்றியாம்.

அதி. 51 - தெரிந்து தெளிதல் அதாவது, அரசன் தன் ஆட்சிபற்றிய எல்லா வினைகளிலும் சிறப்பாகப் போர்வினையில், தனக்கு உதவி செய்யும் பொருட்டு அமைச்சர் படைத்தலைவர் தூதர் முதலிய துணையதிகாரிகளை அவர் குடிப்பிறப்புக் குணம் அறிவாற்றல் செயல்பற்றி, காட்சி கருத்து உரை ஆகிய அளவைகளாலும் நூலுத்தி பட்டறிவாலும் ஆராய்ந்து தெளிதல். அதிகார முறையும் இதனால் விளங்கும்.

501. அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும்.

(இ-ரை.) அறம் பொருள் இன்பம் உயிரச்சம் - அரசனால் ஆட்சித் துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன் அறமும் பொருளும் இன்பமும்