பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72

திருக்குறள்

தமிழ் மரபுரை



உயிர்க்கேடுபற்றிய அச்சமும் ஆகிய; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - நான்கு தேர்திறத்தால் மனப்பான்மை ஆராய்ந்து தெளியப்படுவான்.

நால்வகைத் தேர்திறத்துள் அறத் தேர்திறமாவது: அரசன் குருக்களையும் அறவோரையும் ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி, “நம் அரசன் அறவோனன்மையின் அவனை நீக்கிவிட்டு அவனிடத்திற்கு அறவாணனான வேறொருவனை அமர்த்தத் தீர்மானித்துள்ளோம். இது அனைவர்க்கும் உடன்பாடே. இதுபற்றி உன் கருத்தென்ன?" என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல்.

பொருள் தேர்திறமாவது: அரசன் படைத்தலைவனையும் படைமறவரையும் ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி, “நம் அரசன் கஞ்சனுங் கையழுத்தக்காரனுமா யிருத்தலின் அவனை நீக்கிவிட்டு அவனிடத்திற்குக் கொடையாளியான வேறொருவனை அமர்த்தத் தீர்மானித்துள்ளோம். இது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததே. இதுபற்றி உன் கருத்தென்ன?” என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல்.

இன்பத் தேர்திறமாவது: அரசன் தன்னுடைய உரிமைச் சுற்றமான மகளிர் கூட்டத்தொடு தொன்றுதொட்டுப் பழகிய ஒரு தவ மூதாட்டியை ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி, “அரசனது உரிமைச் சுற்றத்துள் இன்னாள் உன்னைக் கண்டு கரைகடந்த காதல் கொண்டு உன்னைக் கூட்டுவிக்குமாறு என்னை விடுத்தாள். அவளொடு கூடுவை யாயின், உனக்குப் பேரின்பமும் பெருஞ்செல்வமுங் கிட்டும்" என்று சொல்லி அவன் விருப்பத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல்.

உயிரச்சத் தேர்திறமாவது: அரசன் ஆராயப்படுவான் வீட்டிற்கு ஓர் அமைச்சனைக் கொண்டு ஏதேனுமொரு பொருட்டின் (நிமித்தத்தின்) மேலிட்டுப் பலரை வருவித்து, ஆராயப்படுவா னுள்ளிட்ட அனைவரையும் அரசனுக்கு கேடு சூழக் கூடினாரென்று சிறைசெய்து, அவருள் ஒருவனைக் கொண்டு "இவ் வரசன் நம்மைக் கொல்லச் சூழ்கின்றமையால் நாம் அதற்கு முன் அவனைக் கொன்றுவிட்டு நமக்கேற்ற வேறொருவனை அரசனாக்கிக் கொள்வோம். இது இங்குள்ள எல்லார்க்கும் இயைந்ததே. இதுபற்றி உன் கருத்தென்ன?” என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் சொல்லுதல். இந் நான்கு தேர்விலும் திரியாது தேறினனாயின் எதிர்காலத்திலும் திரியானென்று தெளியப்படுவான் என்பதாம்; தெளிதல் வினைக்கமர்த்தத் தீர்மானித்தல். தேர்திறத்தைத் தேர்வையெனினும் ஒக்கும்.