பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

73



"இவ் வடநூற் பொருண்மையை யுட்கொண்டு இவரோதிய தறியாது. பிறரெல்லாம் இதனை உயிரெச்சமெனப் பாடந்திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே யுரைத்தார்" என்று பரிமேலழகர் இங்குந் தம் நஞ்சைக் கக்கியிருக்கின்றார். மூவேந்தராட்சி படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருவதென்று இவரே வேறோரிடத்திற் கூறியிருந்தும், பாட்டி பேர்த்தி யிடமிருந்து நூல்நூற்கக் கற்றுக்கொண்டாள் என்பது போல, தமிழவேந்தர் பிற்காலத் தாரியரிடம் அரசியல் திறங்களை அறிந்துகொண்டார் என்பது தன்முரணானதே. இத் தேர்திறம் வடமொழியில் உபதா (upadha) எனப்படும். அதற்கு மேலிடுதல் என்பதே மூலப்பொருள். இப் பிற்காலக் குறியீடு காமந்தகீய நீதிசாரம், பட்டி காவியம், சிசுபாலவதம் முதலிய நூல்களில் வந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. சென்னைநாட்டு வேத்தவை வடமொழிப் புலவராயிருந்த ஒருவர், வடநூல்களில் விளங்காதிருந்த உபதா என்னும் செய்தி, திருக்குறளைப் படித்த பின்புதான் தமக்கு விளங்கினதாகச் சேலங்கல்லூரியில் ஒரு முறை தாம் ஆற்றிய சொற்பொழிவிற் கூறினார். பண்டைத் தமிழ்ப் பொருள் நூல்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதனாலும், உரையாசிரியர் மரபு ஆரிய இனமாக மாறியதினாலுமே, தமிழர் பழந்தமிழ் நாகரிகத்தைச் செவ்வையாய் அறியக்கூடாது போயிற்றென அறிக.

502. குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு நாணுடையான் கட்டே தெளிவு.

(இ-ரை.) குடிப் பிறந்து - ஒழுக்கத்தால் உயர்ந்த குடும்பத்திற் பிறந்து; குற்றத்தின் நீங்கி - நடுநிலையின்மை, விரைமதியின்மை, அன்பின்மை, மடி, மறதி முதலியவற்றொடு ஐவகையும் அறுவகையுமான குற்றங்களினின்றும் நீங்கி; வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்குப் பழி வந்துவிடுமோ என்று அஞ்சும் நாணுடையவனிடத்தே அரசனது தெளிவு.

குடிப்பிறந்தார் வடுப்பரிதலை,

"அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வ ரொருமா சுறின்” (நாலடி.151)

என்பதாலறிக. நாண் இழிதொழில்பற்றிய நன்மக்கள் அருவருப்பு.

"கருமத்தா னாணுத னாண" (குறள். 1011)