பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

75



என்று விடையிறுத்ததும் கவனிக்கத்தக்கது. இம் முடிபுப்படியே குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியைச் சேர்ந்த அருண்மொழித்தேவர் இரண்டாங் குலோத்துங்கச் சோழனின் தலைமை யமைச்சராக அமர்த்தப் பெற்றார் போலும்!

504. குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொளல்.

(இ-ரை.) குணம் நாடி- குணமுங் குற்றமுமாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால், ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக.

ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து, அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின், அம் மயக்கத்தைத் தெளிவிப்பது இக் குறள். குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, குணம் மிகின் வினைக்குரியவ னென்றும், குற்றம் மிகின் அல்லனென்றும், தீர்மானிக்க என்றார். மிகையுடையது மிகையெனப்பட்டது. மிகை பன்மைபற்றி அல்லது தலைமைபற்றித் தீர்மானிக்கப்படுவது.

505. பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்.

(இ-ரை.) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக் கல் - மக்கள் அறிவாற்றல் குணங் கல்வி பொருள் ஆகியவற்றால் அடையும் மேன்மைக்கும் மற்றக் கீழ்மைக்கும் உரைகல்லா யிருப்பது; தம்தம் கருமமே - அவரவர் செய்யும் வினையே யன்றி வேறொன்று மன்று.

கையூட்டினாலும் இனவுணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும், உண்மையான உயர்விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே என்பது ஆசிரியர் கருத்து. ஆகவே, வினைத்திறமை யுள்ளவனையே வினைக்கமர்த்துக என்பதாம். "பெருமையுஞ் சிறுமையுந் தான்றர வருமே.” என்னும் அதிவீரராம பாண்டியன் கூற்று இக் குறட் சுருக்கமாகும். கருமத்தைக் கட்டளைக் கல்லாக உருவகித்துப் பெருமை சிறுமைகளை மாழை (உலோக) வகைகளாக உருவகியாது விட்டது ஒருமருங்