பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76

திருக்குறள்

தமிழ் மரபுரை



குருவகம். ஏகாரம் தேற்றம். ஒருவனுக்கு அறிவாற்றல் மிக்கிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் வினைத்திற மின்றேல் அவற்றாற் பயனில்லை யென்பதாம். பரிமேலழகர் பெருமை சிறுமைக்குக் கரணியமாகப் பிறப்பையுங் குறித்துள்ளார்.

506. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.

(இ-ரை.) அற்றாரைத் தேறுதல் ஓம்புக - மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத் தலைவராகத் தெளிதலை விட்டுவிடுக; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் வேறு தொடர்பில்லாதவராதலால்; பழிநாணார் - பழிக்கு அஞ்சார்.

பிள்ளைகளைப் பெறாதவர்க்குப் பிறரிடத்து அன்புண்டாகா தென்பதும், உற்றா ருறவின ரில்லாதவர்க்குப் பழிபளகு (பாவம்) பற்றிய அச்சமிரா தென்பதும், பொதுவான உலக நம்பிக்கை. ஆதலால் அத்தகையோரை வினைக்கமர்த்தின், குடிகள் கெடுவதொடு பொறுப்பற்ற வினையால் அரசுங்கெடும் என்பதாம். 'பற்றிலர்' என்பதனால் உறவினர் என்பது வருவிக்கப்பட்டது. ஓம்புதல் காத்தல்; இங்கு நிகழாவாறு காத்தல்.

507. காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாந் தரும்.

(இ-ரை.) காதன்மை கந்தா - பேரன்புடைமையைப் பற்றுக்கோடாகக் கொண்டு; அறிவு அறியார்த் தேறுதல் - தம் வினைக்கு அறிய வேண்டிய வற்றை அறியாதாரைத் தெளிந்து அமர்த்துதல்; பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு அறியாமையால் விளையுந் தீங்குகள் பலவற்றையும் உண்டாக்கும்.

அறிவிலாரைத் தனக்கு மவர்க்கு மிடைப்பட்ட பேரன்புபற்றிக் கண்ணோடி அரசன் வினைத் தலைவராக்கின், அவரால் வினை அடியோடு கெடும். அதனால், அரசன் கெடுவதுடன் வினையறியாதவன், வினைக்குரியாரை அறியாதவன், தன்னாக்கம் அறியாதவன், குடிகள் நலமறியாதவன் எனப் பல அறியாமைப் பட்டங்களும் பெற நேரும். ஆக என்னும் குறிப்பு வினையெச்சவீறு 'ஆ' எனக் கடைக்குறைந்து நின்றது. 'பேதைமை' ஆகுபொருளது.