பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

77



508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும்.

(இ-ரை.) பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னொடு தொடர்பற்ற ஒருவனை ஒருவழியாலும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத் தெளிவு அவன் வழியினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

தொடர்பு தன் குடியோ டியைந்த உறவு. தெளிதல் வினைத்தலை வனாக்குதல். அவன் வினைக்கேட்டால் அரசனும் அவன் வழியினரும் அழிவர் என்பதாம். நான்காம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன, 'தேரான்' எதிர்மறை முற்றெச்சம்.

509. தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற் றேறுக தேறும் பொருள்.

(இ-ரை.) யாரையும் தேராது தேறற்க - எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க: தேர்ந்தபின் தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரை நம்பி அவரிடம் ஒப்படைக்கக் கூடிய வினைகளைப்பற்றி ஐயுறற்க.

உம்மை சிறப்பின்பாற் பட்டது. வினைவகையில், 'தேறற்க' என்றது பொதுத் தேர்வும் 'தேறுக' என்றது சிறப்புத் தேர்வும் பற்றியனவாகும். 'பொருள்' ஆகுபொருளது.

510. தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும்.

(இ-ரை.) தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும்; தெளிந்தான்கண் ஐயுறவும் - ஒருவனை ஆராய்ந்து தெளிந்தபின் அவனைப்பற்றி ஐயுறுதலும் ஆகிய இவ் விரண்டும்; தீரா இடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தை விளைக்கும்.

'தேரான் தெளிவு' செய்யுங் கேடு முன்னரே (508) கூறப்பட்டது. ஒருவனை ஒரு வினைக் கமர்த்தினபின் அவனிடம் ஒரு குற்றமுங் காணா விடத்தும் அவனை ஐயுறின், இனி இப் பதவி நமக்கு நிலையானதும் உயிர்க்காப்பானது மன்றென்று கருதி, பணியாற்றுவதில் நெகிழ்வதொடு பகைவராற் பிரிக்கவும் படுவான். ஆதலால் 'தேரான் தெளிவு' செய்யுங் கேடு போன்றே