பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78

திருக்குறள்

தமிழ் மரபுரை



'தெளிந்தான்கண் ஐயுறவும்' தீங்கு விளைப்பதாம். ஆகவே இவ் விரண்டுஞ் செய்யற்க வென்பதாம்.

அதி. 52 - தெரிந்து வினையாடல் அதாவது, ஆராய்ந்து தெளியப்பட்ட வினைத்தலைவரை, அவரவர் திறமறிந்து அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவதன்கண் அவரை ஆண்டு நடத்துதல். அதிகார முறையும் இதனால் விளங்கும்.

511. நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா னாளப் படும்.

(இ-ரை.) நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் தனக்கிட்ட பணியில் அரசனுக்கு நல்லனவும் தீயனவு மானவற்றை ஆராய்ந்து; நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் நல்லனவற்றையே விரும்பிய இயல்பை யுடையான்; ஆளப்படும் - பின் அரசனால் உண்மையானவன் என்று அறியப்பட்டுச் சிறந்த வினைகளில் ஆளப்படுவான்.

நொதுமலாகவோ பகையாகவோ வுள்ள வேற்றரசனிடம் தூது போன விடத்துத் தன்னரசனுக்கு நன்மையாகவே வினைமுடித்தவன், பின்னும் அவ்வியல்பினனாகவே யிருப்பானென்று நம்பப்பட்டு, அத் துறையிலும் அதுபோன்று பொறுப்பு வாய்ந்தனவும் உயிர்நாடி யானவுமான பிற துறைகளிலும் ஆளப்படுவான். இங்ஙனமே, விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயருக்கு நாகம நாயக்கன் இருந்தது போலன்றி, அவன் மகன் விசுவநாத நாயக்கன் இருந்ததுபோல் உண்மையான படைத்தலைவனே நிலையான படைத்தலைமைக்கு அமர்த்தப்படுவான். 'புரிந்த' என்னும் இறந்தகாலப் பெயரெச்சத்தால் வினைக்குரிய தகுதி யறிதற்பொருட்டு முன்னிட்ட பணியென்பது அறியப்படும்.

512. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை யாராய்வான் செய்க வினை.

(இ-ரை.) வாரி பெருக்கி - பொருள் வருவாய்களை விரிவாக்கியும் பல்குவித்தும் பெருகச் செய்து; வளம் படுத்து - அவற்றாற் செல்வத்தை வளர்த்து; உற்றவை ஆராய்வான் - அவற்றிற்கு நேர்ந்த இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்க வல்லவனே; வினை செய்க - அரசனுக்குத் தலைமை யமைச்சனாக விருந்து பணியாற்றுக.