உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்® (துளைத்தற் கருத்துவேர்)

91

மடுப்படுத்தல் = ஆழ்ந்திருத்தல். “மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள்". (தேவா.80: 10).

மடு - மடம்' = கோழிகளை உள்ளடைக்கும் சுடுமண் குடாப்பு.

மடு - மடம்2 = 1. இரப்போக்கு உணவளிக்குமிடம் அல்லது இரப்போர் உண்டு தங்குமிடம். 2. துறவியர் தங்குமிடம். 3. வழிப்போக்கர் தங்குமிடம். 4. ஊர்ப் பொதுக் கட்டடம்.

இராமடமூட்டுதல் = ஆண்டுமாறிகளும் அடங்காப்பிடாரி களுமான பிள்ளைகள் பெற்றோரைவிட்டுப் பிரிந்து பலவூர் சுற்றித்திரிந்து பல்லாண்டுகட்குப்பின் தம்மூர் மடத்தில் வந்து தங்கி யிருக்கும்போது, அவர் பெற்றோர், தம் உறவைக் காட்டிக்கொள்ளாமலே, தம் பேரன்பினால் அவர்க்கு அறுசுவை நல்லுண்டிகளை இராத்தோறும் ஆள்வாயிலாகப் படைத்துவரல்.(ஈடு, 1: 1 : 5).

சங்கரநயினார் கோவிலில், அயலூரினின்று கட்டுச்சோறு கொண்டுவருவார் தங்கியுண்ண ஒரு மடமிருந்தது. அது கட்டுச்சோற்று மடம் எனப்பட்டது.

சிவகாசியருகில், திருவில்லிபுத்தூர் செல்லும் பெருஞ்சாலைமேல், வழிப்போக்கர்க்குப் புளித்த தண்ணீர் வழங்க ஒரு மடமிருந்தது. அது புளித்த தண்ணீர் (புளிச்சாணி) மடம் என்னப்பட்டது.

இன்றுள்ள தரும்புர திருவாவடுதுறை திருப்பனந்தாட் சிவமடங்களும், பெருஞ்செல்வங் கொண்டனவேனும், உண்மையில் துறவியர் உண்டுறையும் இடங்களே. ஆதலால் மடம் என்னும் சொல், மடுத்தல் (உண்ணல்) என்னும் வினையை அடிப்படையாகக் கொண்ட தென்சொல்லே.

டமொழியாளர் தென்னாடு வந்தபின், மட்ட (matha) என்று திரித்துக்கொண்டனர். அதற்கு வடமொழியில் மூலமில்லை. மேலும், ஆரியர் வருமுன்னரே தமிழகத்திற் பேரூர் தொறும் மடமிருந்தது.

மடு - மடை. 1. தொளை (திவா). 2. வாய். 3. குளத்திற்கு வாய்போன்ற மதகு. "உழவ ருடைத்த தெண்ணீர் மடை" (தஞ்சைவா. 151). 4. மதகுபலகை. 5.நீரணை. 6. ஓடை. "மடைதோறும் கமலமென் பூச்செறி யெறும்பியூர் (தேவா. 372 : 9). 7. அணிகலக் கடைப்பூட்டு. “மடைசெறி முன்கைக் கடகமொடு" (புறம். 150). 8. படைக்கல மூட்டு. "மடையவிழ்ந்த...வேல்" (சீவக. 293). 9. அழுத்தின ஆணி. “மடைகலங்கி நிலைதிரிந்தன" (புறம். 97).10. உண்ணுஞ்சோறு (பிங்.). 11. சமையல் வேலை. “அடுமடைப் பேய்க்கெலாம்” (கலிங். 139). 12. தெய்வப்படையல். "மடையடும் பால்" (கலித். 109).

மடைத்தொழில் = சமையல் வேலை. "மடைத்தொழிற்கு மிக்கோன்" (நள. கலிநீங். 25).