உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

வேர்ச்சொற் கட்டுரைகள்

இருளைக் குறிக்கும் dark என்னும் ஆங்கிலச் சொல், கருமை, அறியாமை என்னும் பொருள்களையுங் குறித்தல் காண்க.

மால்-மாலை = 1. தொடுக்கப்பட்டது. வரிசையாகப் பொருந்தியது. 2. தொடுத்த பூந்தொடை. "மாலைபோற் றூங்குஞ் சினை” (கலித். 106 : 27). 3. மலர்மாலைபோல் தொடுத்த அல்லது கட்டிய மணிமாலை அல்லது முத்துமாலை. 4. பூமாலை போன்ற பாமாலை. எ-டு: திருவேகம்ப மாலை, திருவரங்கத்து மாலை. 5. வரிசை. "மாலை வண்டினம்" (சீவக. 2397). "மாலை மாற்றே (யாப். வி. ப. 493). 6. முத்துமாலை போன்ற வடிவம். மாலை மாலையாகக் கண்ணீரை வடித்தாள் (உ.வ.). 7 . கயிறு. "மாலையு மணியும்" (பரிபா. 5: 67). 8. மாலைபோன்ற பெண். (திருக்கோ. 1, உரை, ப.9). 9.பாண்குடிப் பெண்ணாகிய விறலி. “பாணர் மாலையர் மாலை யெய்தி" (திருவாலவா. 54 : 26). 10. மயக்கம், கலப்பு. 11. பகலும் இரவுங் கலக்கும் அந்திப் பொழுது. "மாலை யுழக்குந் துயர்” (குறள். 1135). 12. இரா. “மாலையும் படா விழித்திரளது” (தக்கயாகப் . 155). 13. இருள். "மாலைமென் கேசம்" (திருப்பு. 32). 14. குற்றம் (தொல். சொல். 396, உரை). 15. பச்சைக்கற் குற்றம் (சிலப். 14 : 184, உரை).

பூமாலையையும் பொழுதுமாலையையுங் குறிக்கும் மாலை யென்னுஞ் சொல் ஒன்றே. சென்னைப் ப.க.க.த. அகரமுதலியில், அவ்விரண்டையுங் குறிக்குஞ் சொல் வெவ்வேறென்று காட்டப்பட் டுள்ளது. இது பூமாலையைக் குறிக்குங் சொல்லை, வடசொல்லென்று காட்ட வகுத்த சூழ்ச்சியே.

மாலை - வ. மாலா.

மாலை-மாலிகை = சிறுமாலை. 'கை' சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ: குடி = குடிகை(சிறு கோயில்).

மாலிகை-வ. மாலிகா(மாலை). வடசொல் சிறுமைப் பொருளை இழந்து நிற்றல் காண்க.

மால்-மான். மான்றல் = 1. ஐயுறுதல் (திவா.). 2. மயங்குதல் (சூடா.).

மால்-மாலம் = 1. மயக்கு. 2. ஏமாற்று. 3. நடிப்பு.

மால்-மான்-வான் = 1. கருமை. 2. நீலவானம். “வானுயர் தோற்றம்" (குறள். 272). 3. தேவருலகு. "வான்பொரு நெடுவரை” (சிறுபாண். 128.4 வீட்டுலகம். “வானேற வழிதந்த" (திவ். திருவாய். 10 : 6 : 5), 5. மூலக் கருப்பொருள். "வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின்" (கம்பரா. அயோத். மந்திர. 1). 6. கருமுகில். “ஏறொடு வான்ஞெமிர்ந்து" (மதுரைக். 243). 7. மழை. “வானின் றுலகம் வழங்கி வருதலான்" (குறள். 11). 8. அமுதம். வான் சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதி" (தேவா. 586 : 1). "வான்..தானமிழ்தம் என்றுணரற் பாற்று" (குறள். 11). 9. நன்மை. “வரியணி சுடர்வான் பொய்கை" (பட்டினப். 38). 10. அழகு. "வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும்" (கலித். 103).

66

"