உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (பொருந்தற் கருத்துவேர்)

ம. வானு.

மான்-மானம் = 1. கருமை. 2. நீலவானம். 3. கருமுகில். 4. மழை.

39

5. குற்ற அளவு, குற்ற நிலை "மெய்நிலை மயக்க மான மில்லை” (தொல். எழுத். மொழி.14) வானத்தை மானம் என்பதே கல்லா மாந்தர் உலக வழக்கு. கருமை என்னும் பொருளடிப்படையிலேயே, மானம் என்னும் சொல் குற்றப் பொருள் கொண்டதாகத் தெரிகின்றது.

வான்-வானம் = 1. காயம் என்னும் நீலவானம். "வானத் தரவின் வாய்க்கோட் பட்டு” (கலித். 105). 2. தேவருலகு. "வான மூன்றிய மதலை போல (பெரும்பாண். 346). 3. கருமுகில். "ஒல்லாது வானம் பெயல்" (குறள். 559). 4. மழை. “வானம் வாய்க்க மண்வளம் பெருகுக" (மணிமே. 19 : 149).

தெ. வான, க. பான (b).

மல்-மர்-மரு. மருவுதல் = 1. கலந்திருத்தல். "மருவார் சாயல்" (சீவக. 725). 2. தழுவுதல். "மருவுமின் மாண்டா ரறம்" (நாலடி. 36). 3 . பயிலுதல். "பாத்தூண் மரீஇ யவனை” (குறள். 227). 4. வழக்கப்படுதல். "மரீஇய பண்பே (தொல். பொருள். 308). 5. புணர்தல். "வெம்புலை மாதர்...மருவும் வேட்கையான்" (பிரமோத. 4 : 4). 6. ஊழ்குதல்(தியானித்தல்). “கழல்களை மருவாதவர் மேல்மன்னும் பாவமே" (தேவா. 501 : 1). ஊழ்குதல், மனத்தாற் பொருந்துதல்.

மரு-மருமம் = 1. தழுவும் மார்பு. "மருமத்தி னெறிவேல்' (கம்பரா. கையடை. 11). 2. உயிர்நாடியான உறுப்பு. "எங்கு மருமத்திடைக் குளிப்ப' (பு.வெ. 7 : 23). 3. மறைபொருள் (இரகசியம்). (சங். அக.). 4. உடம்பு. "மந்தர வலியின் மருமம்" (ஞான. 59 : 20).

மரு-மார் = 1. நெஞ்சு, மார்பு. "இப்பாதகன் மாரி னெய்வ னென்று" (கம்பரா. இராவணன் வதை. 192). “ஊரில் கலியாணம், மாரில் சந்தனம்." (பழ.). 2. நான்கு முழமான நீட்டலளவை.

க.மார்.

மார்க்கண்டம், மார்க்கவசம், மார்க்குழி, மார்க்கூடு, மார்வலி, மார்யாப்பு (மாராப்பு) முதலியன மரபு வழக்கான கூட்டுச்சொற்கள்.

மார்-மார்பு = 1. நெஞ்சு. “கள்ளற்றே கள்வநின் மார்பு" (குறள். 1288). 2. பெண் நெஞ்சு, முலை. மாரில் கைபோடுகிறான் (உ.வ.). 3. வடிம்பு. “ஏணி யெய்தா நீணெடு மார்பின் ...கூடு" (பெரும்பாண். 245). 4. தடாகப் பரப்பு. "மார்பின்மை படி..குலவரை" (பரிபா. 15 : 9). 5. அகலம் (சது.). 6. நான்முழ நீளம்.

ம. மார்பு.

மார்பு-மார்பம் = நெஞ்சு, மார்பு. "பொன்றுஞ்சு மார்பம்". (சிலப்.19:61).

மார்பம்-மார்பகம்.