உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

வேர்ச்சொற் கட்டுரைகள்

முட்டுமுடுகு, முட்டிடை முதலிய தொடர்ச்சொற்கள் வழியிடுக்கத் தையும்; முட்டுச்சீலை, முட்டுப் பட்டினி, முட்டுப் பாந்தை முதலிய தொடர்ச்சொற்கள் தீட்டுப்பாட்டையும்;

முட்டுக்கால் தட்டுதல், முட்டுக்குட்டு, முட்டுக் குத்துதல் (முழங்கால்மேல் நிற்றல்), முட்டுப்பிடிப்பு, முட்டுவலி, முட்டுவீக்கம் முதலிய தொடர்ச்சொற்கள் முழங்கால் வினையையும் உணர்த்தும்.

முட்டுதல் = நெருங்குதல், இடுகுதல்.

முட்டு முட்டி = 1. விரற் பொருத்துத் தெரியும்படி முடக்கிய கை. 2. முட்டிக்கையாற் குத்துங் குத்து. "முட்டிகள் படப்பட” (பாரத. வேத்திர. 56). 3. நால் விரல்களை யிறுக முடக்கி அவற்றின்மீது கட்டை விரலை முறுகப் பிடிக்கும் இணையா வினைக்கை. (சிலப். 3 : 18, உரை). 4. கைப்பிடியளவு. "முட்டி மாத்திர மேனும்" (சேதுபு. இராமதீ. 3). 5. பிடியளவாக இடும் ஐயம் (பிச்சை). "முட்டிபுகும் பார்ப்பார்" (தனிப்பா.). 6. படைக்கலம் பிடிக்கும் வகை. “துய்ய பாசுபதத் தொடையு முட்டியும்" (பாரத. அருச்சுனன்றவ. 129). 7. ஒருவர் தம் கையுள் மறைத்ததை இன்னொருவர் தாமாக அறிந்து கூறுங் கலை: 8. திருவிழாவில் ஊரெல்லைத் தெய்வத்திற்கும் படைக்குஞ் சோறு. 9. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து.

முட்டுதல் என்பது ஒரு பொருளின் தலை அல்லது கடை இன்னொரு பொருள்மேற் படுதலாதலால், முட்டும் பகுதியினின்று முடிவு அல்லது எல்லைப் பொருள் தோன்றிற்று.

எல்லைக்கறுப்பன் (கருப்பன்), எல்லைப்பிடாரி, எல்லையம்மன் என்னும் பெயர்கள், சிற்றூர்வாணரின் எல்லைத்தெய்வ வணக்கத்தைக் குறிக்கும்.

முட்டி-வ.முஷ்டி

முட்டிக்கால் = 1. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து. 2. முட்டிக்காற் பின்னல். (W.).

முட்டிக்கால் தட்டுதல் = முழங்காற் சிப்பிகள் ஒன்றோடொன்று உரசுதல். முட்டிக்காலன் = முட்டிகள் தட்டும்படி நடப்பவன் (W.). முட்டிக்காற் கழுதை = பின்னங்கால் முட்டிகள் தட்டும்படி நடக்குங் கழுதை.

முட்டிச்சண்டை = முட்டிக்கைப்போர் (W.). முட்டிப்பிச்சை = பிடியரிசி

யையம்.

முட்டியடித்தல் = 1. முட்டிச் சண்டையிடுதல். 2. முட்டிப் போர் செய்தல் போல் வருந்தித் திண்டாடுதல். வேலைக்கு முட்டியடிக்கிறான் (உ.வ.).

முட்டிக்கால் என்பது போன்றே முட்டிக்கை என்பதும்

பொருத்தையே சிறப்பாகக் குறிக்கும். முன்னது காற்பொருத்தும் பின்னது விரற்பொருத்தும் ஆகும்.