உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

=

55

முள் - மூள். மூளுதல் 1. பொருந்துதல். 2. தீப்பற்றுதல். 3. சினங்கிளம்புதல். 4. மிகுதல். 5. முனைதல் "முதலற முடிக்க மூண்டான்' (கம்பரா. மாயாசீ. 96).

=

மூள்-மூட்டு (பி.வி.) மூட்டுதல் 1. பொருத்துதல். 2. இணைத்தல், இசைத்தல். “கால்கொடுத் தெலும்பு மூட்டி" (தேவா. 631: 3). 3. தைத்தல். இந்தக் கோணியை மூட்டு (உ.வ.). 4. தீப்பற்ற வைத்தல். “மூட்டிய தீ" (நாலடி. 224). 5. தீ மூட்டுவதுபோற் சினமூட்டுதல். 6. பகை மூட்டிச் சண்டைக்குத் தூண்டுதல். இருவருக்கும் நன்றாய் மூட்டிவிட்டு விட்டான் (உ.வ.). 7.ஒன்றைச் செலுத்துதல். “கடுகுபு கதிர்மூட்டி” (கலித். 8).

ம. மூட்டுக, தெ. மூட்டிஞ்சு (Muttintsu).

மூட்டு = 1. உடல், அணி முதலியவற்றின் பொருத்து. "கவசத்தையு மூட்டறுத்தான்" (கம்பரா. சடாயுவ. 113). 2. சந்திப்பு (யாழ். அக.). 3. தையல். 4. கட்டு. “வன்றாண் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்து” (கந்தபு. மீட்சிப். 8). 5. கட்டப்பட்டது (W.). 6. குதிரைக் கடிவாளம் (பிங்.). 7. மனவெழுச்சி, 8. வாழையிலைக் கற்றை. மூட்டுமூட்டாய்ப் பிரிந்துபோய் விட்டது (உ.வ.) 9. பொத்தகக் கட்டடப் பகுதி.

ம. தெ. மூட்டு, க. மூட்டை.

மூட்டு -மூட்டை = 1. பொட்டணம். இந்தத் துணிகளையும் மூட்டையில் வைத்துக் கட்டு (உ.வ.). 2. பொதி. அரிசி மூட்டைகளை யெல்லாம் வண்டியிலேற்றிக் கொண்டுபோய்விட்டார்கள். 3. அறுபது பட்டணம்படி கொண்ட ஒரு கோணியளவு. 4. பெரும்பொய். அவன் மூட்டை யளக்கிறான். ம. மூட்ட, தெ. மூட்ட, து. மூட்டே.

மூட்டை-மூடை = 1. பொதி. “பொதிமூடைப் போரேறி” (பட்டினப். 137). 2. மிகச் செறிந்த கூலக்கோட்டை. “கடுந்தெற்று மூடை" (புறம். 285).3. கூலக்குதிர். “கழுந்தெற்று மூடையின்"(பொருந. 245).

=

மூட்டு-மாட்டு. மாட்டுதல் 1. இணைத்தல். "சிறுபொறி மாட்டிய பெருங்கல் லடாஅர்" (நற். 19). 2. தொகுத்தல். “அம்பினை மாட்டி யென்னே’ (கம்பரா. நிகும்பலை. 96). 3. செருகுதல். “அடுப்பினின் மாட்டு மிலங்ககில்" (காஞ்சிப்பு. நகர. 73). 4. மனத்திற் கொள்ளுதல். "சொன்மாலை யீரைந்து மாட்டிய சிந்தை” (திருவிசை. கருவூ. 8 : 10). 5. தீப்பற்றவைத்தல். “விறகிற்... செந்தீ மாட்டி” (சிறுபாண். 156). 6. விளக்குக் கொளுத்துதல். "நெய்பெய்து மாட்டிய சுடர்” (குறுந். 398). 7. அடித்தல். "வின்முறிய மாட்டானோ" (தனிப்பா.). நன்றாய் மாட்டுமாட்டென்று மாட்டிவிட்டான் (உ.வ). 8. பயன்படுத்துதல். “வள்ளறான் வல்ல வெல்லா மாட்டினன்" (சீவக. 1274).

தெ.மாட்டு.