உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருள்திரி சொற்கள்

91

முதன்முதல் வந்தவர்கள் தலைவராகவும் அரசியலை மேற்கொண்ட வராகவு மிருந்ததினால், அவர்கட்குத் துரை என்பது பொதுப் பெயராக வழங்கத் தலைப்பட்டது.

பெண்ணை அல்லது பெண்டிரைக் குறிக்கும் மாதர் என்னும் சொல், காதற்பொருளைத் தருவதற்குக் காரணம், பெண்டிரின் காதலிக்கப்படும் தன்மையாகும்.

"

“மாதர் காதல்” என்பது தொல்காப்பியம்.

(உரியியல், 30)

சேவகன் (வ.) என்னும் பெயர், 'ஊழியன்', 'ஏவலன்', 'மறவன்’ முதலிய பொருள்களைத் தரும். ஊழியனும் ஏவலனும் மறவராயிருந்தால்தான் உண்மையாகவும் சிறப்பாகவும் ஊழியஞ் செய்ய முடியும். பண்டைக்காலத்தில் ஏவலர் இளையர் எனப் பட்டதும், அவர் இளமையோடு கூடிய மறமும் வலியும் உடையரா யிருந்தமைபற்றியே.

வண்ணம் என்பது நிறம். அது நிறம்போன்ற வகையையும், செய்யுளின் ஓசை வகையையும், ஓசையிற் சிறந்த செய்யுள் அல்லது பாட்டையும் குறித்தது. அவ்வண்ணம் இவ்வண்ணம் என்பன வகையையும், நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர்வண்ணம் என்பன ஓசை வகையையும், வண்ணகவொத்தாழிசைக்கலி, நாட்டைவண்ணம் என்பன செய்யுள் அல்லது பாட்டையும் குறித்தல் காண்க. வண்ணத்தை வர்ணம் என்பர் வடமொழியார்.

வெள்ளை நிறமானது தெளிவாகவும் களங்கமற்றுமிருப்பதால் வெள்ளை என்னும் சொல் தெளிவையும் களங்கமின்மையையும் குறிக்கும். எளிய நடையை வெள்ளை நடை என்பர். சூதுவா தற்றவனை வெள்ளை என்றும் வெள் நந்தி என்றும் அழைப்பர். "வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை” என்றார் ஔவையாரும். குற்றமற்ற பாவகை வெள்ளை எனப்பட்டது. வெள்ளையான பா வெண்பா.

பக்குவம் செய்யப்படாத மூலிகை பச்சையாயிருப்பதால், பச்சை என்னும் சொல், பக்குவம் செய்யப்படாத அதாவது அடக்கிச் சொல்லப்படாத இடக்கரைக் குறிக்கும். ‘பச்சைப் பேச்சு', 'பச்சை பச்சையாய்ப் பேசுதல்' என்பன உலக வழக்கு.

எளியாரிடத்தும் வலியாரிடத்தும் ஒப்ப நின்று ஒறுக்கும் தன்மைபற்றித் தெய்வச் சான்றாகக் கொள்ளப்படுவது நெருப்பு. அதன் நிறம் செம்மை. அதனால் செம்மை என்னும் சொல் நேர்மையை உணர்த்தும்.