உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

ஒதுக்குதல்; அரித்தல் பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்; அருந்துதல் சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்; ஆர்தல் வயிறு நிரம்பவுண்ணுதல்; உண்ணுதல் எதையும் உட்கொள்ளுதல்; உதப்புதல் (குதப்புதல்) வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சவைத்தல்; உறிஞ்சுதல் ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்; ஒதுக்குதல் ஒரு கன்னத்தில் அடக்குதல்; கடித்தல் கடினமானதைப் பல்லால் உடைத்தல்; கரும்புதல் ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்; கறித்தல் மெல்லக் கடித்தல்; குடித்தல் கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல்; குதட்டுதல் கால்நடைபோல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்; கொறித்தல் ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்; சப்புதல் சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்; சவைத்தல் வெற்றிலை புகையிலை முதலிய வற்றை மெல்லுதல்; சாப்பிடுதல் சோறுண்ணுதல்; சுவைத்தல் ஒன்றன் சுவையை நுகர்தல்; சூப்புதல் கடினமானதைச்சப்புதல்; தின்னுதல் மென்று உட்கொள்ளுதல்; நக்குதல் நாவினால் தொடுதல்; பருகுதல் கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்; மாந்துதல் ஒரே விடுக்கில் அல்லது பெருமடக்காய்க் குடித்தல்; முக்குதல் அல்லது மொக்குதல் வாய் நிறைய ஒன்றையிட்டுத் தின்னுதல்; மெல்லுதல் பல்லால் அரைத்தல்; மேய்தல் மேலாகப் புல்லைத் தின்னுதல்; விழுங்குதல் மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்; மிசைதல் மிச்சில் உண்ணுதல்.

44. இரக்கும் வகைகளும், ஈயும் வகைகளும்

ஈ என்று இரத்தல் இழிந்தோன் செயல்; தா என்று கேட்டல் ஒத்தோன் செயல்; கொடு என்று கட்டளையிடுதல் உயர்ந்தோன் செயல்.

“ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே”

“தா என் கிளவி ஒப்போன் கூற்றே"

“கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே”

எச்சவியல், 49-50-51)

என்பன தொல்காப்பியம். ஆதலால், ஈதல் என்பது இழிந்தோர்க் களித்தல்; தருதல் என்பது ஒத்தோர்க் களித்தல்; கொடுத்தல் என்பது உயர்ந்தோர்க்களித்தல்.

அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலையும், இடுதல் என்பது கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க் கீதலையும்;