உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்ச்சொல் வளம்

காய்ந்த பயிர் வகை

65

வைக்கோல் காய்ந்த நெல் வரகு முதலிய பயிர்; செத்தை காய்ந்த செடி; தட்டு அல்லது தட்டை காய்ந்த சோளம் கரும்பு முதலிய பயிர்; மாறு காய்ந்த துவரை மிளகாய் முதலிய பயிர்; உலவை காய்ந்த மரம்; சாவி பட்டுப்போன நெல் வரகு முதலியவற்றின் இளம் பயிர்.

வெட்டிய விறகுத்துண்டு வகை

கட்டை பெரியது; சிறாய் சிறியது; பொடி அல்லது தூள்சிறுசிறாய்.

மரப்பட்டை வகை

பட்டை புளி வேம்பு முதலியவற்றின் பட்டை; சிறாம்பு தென்னை பனை முதலியவற்றின் பட்டை; மட்டை அல்லது தடை வாழையின் பட்டை.3

பயிர்ச்செறிவு வகை

புதர்குத்துச்செடிகளின் செறிவு; பொதை பெருஞ்செடி கொடிகளின் செறிவு; பொதும்பர் மரங்களின் செறிவு.

நிலைத்திணைத் தொகுப்பு வகை

செய் நெல் கரும்பு முதலிய பயிர்த்தொகுதி; தோட்டம் மிளகாய் கத்தரி முதலிய செடித்தொகுதி; தோப்பு மா தென்னை முதலிய மரத்தொகுதி; காடு முல்லை குறிஞ்சியிலுள்ள நிலைத் திணைத் தொகுதி; அடவி மரமடர்ந்த காடு; சோலை மரமடர்ந்த இயற்கைத் தோப்பு; கா காக்கப்படும் சோலை; கானல் கடற்கரைச் சோலை; வனம் மக்கள் வழக்கற்ற காடு.

செய் வகை

முதை பழங்கொல்லை; இதை புதுக்கொல்லை; புன்செய் சிறிது பண்படுத்தப்பட்ட நிலம்; நன்செய் நன்றாய்ப் பண்படுத்தப்பட்ட நிலம்; புறவு முல்லை நிலம்; கொல்லை முல்லை நிலத்துப் புன்செய்; புனம் குறிஞ்சிநிலத்துப் புன்செய்; வானாவாரி (மானாமாரி) மழைபெய்து விளையும் நிலம்.

3. பட்டை என்னும் பெயர் வாழைத்தடைக்கும் வழங்கும்.