உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

கட்டுரை வரைவியல்

கனம் பொருந்திய ஐயா, என்று விளி முறையிலும் கனம் பொருந்திய ஐயாவுக்கு எழுதுவது என்று முகவுரை முறையிலும், கடிதங்களை இருவகையாய்த் தொடங்கலாம்.

iv. செய்தி (Body of the Letter)

அறிவிக்கப்படவேண்டிய செய்தி, அளவிற்கும் பொருளுக்குந் தக்கபடி, ஒரு பாகியாய் அல்லது பல பாகிகளாயிருக்கலாம்.

v. முடிப்பு (Subscription)

,

செய்தியின்கீழ் வலப்புறத்தில், தங்களின் தாழ்மையுள்ள, தங்களின் வணக்கமுள்ள, தங்களின் கீழ்ப்படிதலுள்ள, தங்களின் உண்மையுள்ள, தங்களின் அன்பான என்னும் தொடர்களில் ஏற்ற தொன்று எழுதப்படலாம். இனத்தார்க் கெழுதியதாயின், எழுதுவார் தம் இன முறையையுங் குறிக்கலாம். கீழோர்க் கெழுதியதாயின், வெறுமையாய் இ ங்ஙனம் என்று குறித்தால் போதும்.

vi. கையெழுத்து (Signature)

முடிப்பின்கீழ்க் கையெழுத்திருத்தல் வேண்டும்.

vii. முகவரி (விலாசம்) (Direction or Superscription)

கடிதத்தின் மறுபுறத்திலாவது, கடிதக் கூட்டின் அல்லது உறையின் (cover) மேற்புறத்திலாவது, கடிதம் பெறுவாரின் முழு முகவரியும் எழுதப்படல் வேண்டும்.

நண்பர்க்கும் ஒத்தார்க்கும், திருவாளர் என்றும், பெரி யோர்க்குத் திருமான் (ஸ்ரீமான்), கனம், மாகனம் என்றும் அவரவர் நிலைக்கேற்ற அடை கொடுத்துப் பெயரெழுதல் வேண்டும்.

பெண்டிர்க்குத் திருவாட்டி (Mrs.) குமரி (Miss.) என்னும் அடைகளிலொன்று எழுதப்படலாம்.

இருபாலார்க்கும் உயர்வு கருதும் போது, பெயர்க்குப் பின் அவர்கள் என்று குறிப்பிடல் வேண்டும். சிற்றுயர்வே கருதின் அவர் என்று குறிப்பிடலாம்.

முகவரிஆங்கிலமுறையில் ஆட்பெயர், அலுவல், கதவெண், தெரு, அஞ்சல், (தபால்) நிலையம், கூற்றகம் (தாலுகா), கோட்டகம் (சில்லா), மாகாணம், தேசம் என்னும் முறையிலும், தமிழ் முறையில் இதன் தலைகீழாகவும் இருக்கலாம். இவற்றுள் முன்னது மிக வசதிப் படலாம்.