உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

113

2. கட்டுரை (Essay)

i. கட்டுரை விதிகள் (Rules of Composition)

மாணவரின் வகுப்புக் கட்டுரை, தலைப்பில் பொருள் குறிக்கப்பெற்றும், இடப்பக்கம் வரந்தையில் (margin) மேலே கட்டுரை யெண்ணுந் தேதியுங் குறிக்கப்பெற்றும், பெரிதுஞ் சிறிதுமன்றி வழக்கமா யெழுதும் எழுத்தளவில், பொருட்கோவை படப் பாகியமைப்புடன், உயர்தரப் பாடசாலை மாணவரதாயின், காற்றாட் பக்கத்தில் மூன்று பக்கமும், கல்லூரி மாணவரதாயின், ஆறு பக்கமும் பேரெல்லையாக வைத்து, எழுத்துப் பிழை சொற்பிழை பொருட் பிழைகளின்றித் தெளிவாயும் துப்புரவாயு மெழுதப்படல் வேண்டும். கட்டுரைக் குறிப்புப் புத்தகங்களில் என்றும் வலப்புறமே எழுதி, இடப்புறமெல்லாம் பிழை திருத்த வெற்றிடமாய் விடல் வேண்டும். கட்டுரையில், வாக்கிய வுறுப்பாக ஆங்கிலவுரை வரல் கூடாது. அவ் வுரையை மொழிபெயர்த்தெழுதி, ஆங்கிலத்தை வேண்டுமாயின், பிறைக்கோட்டில் அமைக்கலாம். வரி முதலில் மெய்யெழுத்து வரக்கூடாது. (குறிப்புப் புத்தகம் - Notebook).

கட்டுரைக் குறிப்புச் சட்டகத்தை இடப்புறம் மேலே எழுதிக்கொள்ளலாம்.

ii. கட்டுரைப் பொருளமைப்பு

கட்டுரைப் பொருள் பொதுவாய், (1) முகவுரை அல்லது தோற்றுவாய், (2) வரையறை (Definition), (3) வகை, (4) கருவி, (5) செய்யும்முறை, (6) பயன், (7) எடுத்துக்காட்டுக்கதை, (8) முடிவு என எண் பகுதியதாகும்.

ஒருவரின் வாழ்க்கை வரலாறாயின், (1) பிறப்பு வளர்ப்பு, (2) கல்வி, (3) அலுவல், (4) இல்லறம், (5) அருஞ்செயலும் பொதுநலத் தொண்டும், (6) குணம் அல்லது ஒழுக்கம், (7) முடிவு என்னும் ஏழு பகுதியதாகும்.

ஒரு விழாவின் (1) தோற்றமும் நோக்கமும், (2) காலமும் இடமும், (3) நடைபெறு முறை, (4) பயன், (5) முடிவு என ஐந்து பகுதியதாகும்.

இவற்றுட் பொருட்கேற்பன கொண்டு, இடையிடை தொடர் மொழி, உவமை, பழமொழி, மேற்கோள் என்பன ஏற்ற பெற்றி யமைத்தெழுதல் நலம்.