உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

கட்டுரை வரைவியல்

“அதுதான் நால்வகை நிலைத்தாய். வருணந்தோறும் வேறுபா டுடைமையின், சிறுபான்மையாகிய அச் சிறப்பியல்புக ளொழித்து, எல்லார்க்கு மொத்தலிற் பெரும் பான்மையாகிய பொதுவியல்பு பற்றி, இல்லறந் துறவறமென இருவகை நிலையாற் கூறப்பட்டது” என்று நூலாசிரியர் கருத்திற் கேற்பக் குறித்துள்ளார். ஆதலால், ஒழுக்கமென்பது எல்லார்க்கும் பொதுவான முக்கரணத் தூய்மையே யன்றிக் குலந்தொறும் வேறுபட்ட வருணாச்சிரம தருமமன்று.

இல்லறத்தில் அகத்தூய்மையும், புறத்தூய்மையும் ஒருநிகரவா யெண்ணப்படும்; துறவறத்தில், அகத்தூய்மை புறத்தூய்மையினும் பன்மடங்கு சிறந்ததா யெண்ணப்படும்.

ஒருவன் எத்துணை எளியவனா யிருப்பினும், தன்னையும் தன் பொருள்களையும், உள்ளும் புறம்பும் தூயவாய் வைத்துக்கொள்வதே நாகரிகமாகும். கந்தையானாலும் கசக்கிக் கட்டுவதும், கூழானாலும் குளித்துக் குடிப்பதும், குடிலானாலுங் கூட்டிக் குடியிருப்பதும் உயர்தர நாகரிகமே. அழகியனவும் விலையுயர்ந்தனவுமான உடைகளால் உடம்பைப் பொதிவதும், விலையும் சுவையுமிக்க உண்டிகளைப் பன்முறை யுண்பதும், மேனிலையும் அகலிடமுமுள்ள மாளிகைகளில் வாழ்வதும், வசதியும் விலையுயர்ந்தனவுமான ஊர்திகளிற் செல்லுவதும், இயந்திரத்தாலும் ஏவலாளராலும் வினைசெய்வதும், இன்னும் இவைபோன்ற பிறவும், அறிஞரும் அறிவிலிகளுமான செல்வர்க்கேயுரிய ஆடம்பர வாழ்க்கையன்றி, நாகரிக வொழுக்கமாகா. இவற்றை நாகரிகமென் றெண்ணுவது மேலைப் புது நாகரிகம்பற்றிய திரிபுணர்ச்சியாகும்.

மேலைக்கல்வி கற்று, மேனாட்டுடை யணிபவரெல்லாம் நாகரிகத்திற் சிறந்தவரென் றெண்ணுவதும் அறியாமையே. கல்வி எம்மொழியினு மிருக்கலாம். உடை தட்பவெப்ப நிலைபற்றித் தேசந்தோறும் வேறுபடுவதாகும். நாகரிகத்திற்கு இன்றியமையாத வேளாண்மை (பிறரை யுபசரித்தல்), விருந்தோம்பல், தாழ்மை முதலிய சிறந்த குணங்களை, மேலை நாகரிக மறியாத நாட்டு மக்களிடையே மிகுதியாய்க் காண்கின்றோம்.

ஆகையால், நாகரிகமென்பது, செல்வர் வறியர் என்னும் இரு சாரார்க்கும் பொதுவான, துப்புரவும் ஒழுக்கமும்பற்றியதே யன்றி, செல்வர்க்கும் மேலையொழுக்கத்தார்க்குமே யுரிய பொருளாகி அழகும் பெருஞ்செலவும் பற்றிய தன்று.

திருந்திய உழவு, நுண் கைத்தொழில், நீர்வணிகம், போக்கு வரவுக்குரிய வாயில் வசதி, ஓவிய உணர்ச்சி, மொழிவளர்ச்சி, கலைப்பெருக்கம், திருந்திய அரசு, குலப்பிரிவின்மை முதலியன நாகரிகத்தின் சிறந்த அடையாளங்களாம்.