உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

"

கட்டுரை வரைவியல் மூன்று, நந்நான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒவ்வொன்பது, பப்பத்து எனப் புணரும். ஒன்றொன்றாய், இரண்டிரண்டாய் என்பதினும், ஒவ்வொன்றாய், இவ்விரண்டாய் என்பது சாலச் சிறந்ததாகும். வெவ்வேறு (வேறு + வேறு), பப்பாதி (பாதி + பாதி) என்பனவும் இங்ஙனமே.

ஒரு, இரு முதலிய எண்ணுப் பெயரெச்சங்களை உயர்திணைப் பெயர்க்குமுன் இடாது, ஒருவர் புலவர், இருவர் அரசர், அல்லது புலவர் ஒருவர், அரசர் இருவர் என்றெழுதுவதே பண்டை வழக்கம். அதுவே இலக்கண மரபும். ஆதலால், அதைப் பின்பற்றுவதே நன்று.

ii. சில பண்புச்சொற் புணர்ச்சி

தனிக்குறிலை யடுத்த ருகரமான சில பண்புச் சொற்கள், வருமொழி உயிர் முதலாயின் அடிநீண்டு ஈற்றுகரங் கெடும்; வல்லினம் மெய் முதலாயின் திரியாது நின்று இனமெலி மிகும்; மெல்லின இடையின மெய்முன் இயல்பாய் நிற்கும்.

எ - டு : பெரு - பேராசை (பெரு + ஆசை), பெருங்குடி, பெருநிலம்.

பெரிய என்ற 'இய' ஈற்றுப் பெயரெச்சமாயின், உயிரோடு புணரும்போது உடம்படுமெய் பெற்றும் மெய்யோடு புணரும்போது இயல்பாயும் புணரும்.

எ - டு : பெரிய + அடி = பெரியவடி; பெரிய + படி = பெரியபடி.

வருமொழி ஆகார முதலாயின், பெரிய என்பதன் ஈற்றகரம் அவ் வாகாரத்துள் அடங்கிவிடும்.

எ - டு : பெரிய + ஆழ்வார் = பெரியாழ்வார்.

பெரிய + ஆண்டி = பெரியாண்டி.

பெரும் ஆனை என்றெழுதுவது தவறு. பேரானை அல்லது பெரிய ஆனை என்றெழுதவேண்டும்.

iii. மெய்யீற்றுப் புணர்ச்சி

மெய்யெழுத்துகள் உயிரோடு கூடின் உயிர்மெய்யாகும். இஃது

இயல்பு புணர்ச்சியே.

எ - டு : போய் + இருக்கிறான் = போயிருக்கிறான்.

தனிக்குறிலை யடுத்த மெய்கள் உயிரோடு கூடின் இரட்டும். இது திரிபு புணர்ச்சியாம்.

எ - டு : பொய் + உரைத்தான் = பொய்யுரைத்தான்.

போய்யிருக்கிறான்; கஷ்டம்மாய் என்றெழுதுவது தவறு.