உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

கட்டுரை வரைவியல்

இங்ஙனமே, விளையாட்டும் உடற்பயிற்சியும் செய்தார்கள் என்பதும் தவறு. விளையாடிப் பின்பு உடற்பயிற்சி செய்தார்கள்; அல்லது விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார்கள் என்றிருத்தல் வேண்டும்.

ஒருவரைப் பல பெயர்களாற் பாராட்டிப் பெயர்தோறும் வினைகொடுப்பின், ஒரு வினைகொடுத்துக் கூறவேண்டும்.

எ - டு : ஐய! வருக, அண்ணால்! வருக, அறிஞ! வருக.

இங்ஙனமன்றி, ஐய! வருக, அண்ணால் அமர்க என வேறு வினை கொடுப்பின் எழுவாய் வேறுபடல் காண்க.

பல தொடர்கள் ஒரு வினைகொண்டு முடியின், தனித்தனி அம் முடிபிற் கேற்றவாயிருத்தல் வேண்டும்.

எ-டு: ஏசு தாம் உலக முடிவில் இங்குத் திரும்ப வருவதாகவும், தம் சொல்லைக் கைக்கொண்டாரெல்லாம் வீட்டைப் பெறுவ தாகவும் கூறி விண்ணுக் கெழுந்தருளினார்.

xiv. சொற்றொடர் முடிபு, முன் முடிபு, பின் முடிபு ('Loose' and 'Periodic' Constructions)

ஒரு கலப்புச் சொற்றொடரில், தலைமைச் சொற்றொடை முற்கூறுவது முன்முடிபாம்; பிற்கூறுவது பின்முடிபாம்.

எ-டு: மாணிக்க நாயகர் கூறுகின்றார், மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு மற்றெல்லாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றனவென்று - முன்முடிபு.

மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல்லாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றன வென்று, மாணிக்க நாயகர் கூறுகின்றார் - பின்முடிபு.

முன்முடிபினும் பின்முடிபே சிறப்புடைத்து. இவற்றை முறையே அகப்பாட்டு முடிபு, புறப்பாட்டு முடிபு என்றுங் கூறலாம்.

XV. சொற்றொடர் அளவு (Length of a Sentence)

ஒரு சொற்றொடர் மிக நெடிதாயில்லாது, வாசித்தவுடன், அல்லது வாசிக்கக் கேட்டவுடன், முழுப்பொருளும் ஒருங்கு தோன்றுமாறு ஓர் அளவா யிருத்தல் வேண்டும். ஒரு சொற்றொடரின் பேரெல்லை பத்துவரிக்கு மேற்படக்கூடாது.

xvi. சொற்றொட ரொருமைப்பாடு (Unity of Sentence)

ஒரு சொற்றொடரில் ஒரு கருத்தேயிருத்தல் வேண்டும்.