உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(4) ஒருதன்மைப்பட்ட பல பொருள்களைச் சேர்த்துக் கூறும் பழமொழிகளிற் பயனிலை தொகும்.

எ-டு : ஊர்வாரிக் கொல்லையும் உத்திரட்டாதிப் பிள்ளையும் (நல்லவை).

மாங்காயிற் பெரியதும் தேங்காயிற் சிறியதும் (நல்லவை).

பகைவன் வாளும் பகைபோற் கேளும் (கொடியவை).

பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும் (நேர்மையானவை).

(5) உண்மையும் நிகழ்ச்சியும் குறித்த வாக்கியங்களில், நாலாம் வேற்றுமை அல்லது ஏழாம் வேற்றமையேற்ற பெயர்க்குப்பின் வரும் எழுவாயின் பயனிலை தொகும்.

எ-டு : அவனுக்குக் காலிலே புண் (இருக்கிறது).

கந்தனுக்கு நாலுநாளாய்க் காய்ச்சல் (அடிக்கிறது).

மரத்திலே கொக்கு (இருக்கிறது).

ஊரிலே கலியாணம் (நடக்கிறது), மாரிலே சந்தனம் (பூசியிருக்கிறது).

(6) அளவு குறித்த வாக்கியங்களில், நிகழ்கால வினை யெச்சத்தின் பின்னும் நாலாம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின்னும் வரும் எழுவாயின் பயனிலை தொகும்.

எ-டு : கோழியடிக்கக் குறுந்தடியா? = கோழியடிக்கக் குறுந்தடி வேண்டுமா?

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு (போதும்), நல்ல பிள்ளைக்கு ஒரு

சொல் (போதும்).

அவரைக்கு ஒரு கொடியும் அகம்படிக்கு ஒரு குடியும்

(போதும்).

முழுத்த ஆண்பிள்ளைக்கு மூன்று வெற்றிலை (வேண்டும், போதும்).

கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை (அளவு); குமரிப்

பெண்ணுக்கு ஒரு பிள்ளை (அளவு).

விருந்தும் மருந்தும் மூன்று வேளை உண்ண வேண்டும்).

'கொம்புளதற்கு ஐந்துமுழம் (விலக வேண்டும்), குதிரைக்குப் பத்து முழம்' (விலக வேண்டும்).

ஒரு இரு முதலிய எண்ணுச் சொற்கள் பெயருரிச்சொல் எனச் சில உரையாசிரியராற் குறிக்கப்பட்டிருப்பினும், உண்மையில் பெயர் வினை இடை என மூவகையல்லது வேறுவகைச் சொல் இல்லையென்றும், பெயரைத் தழுவுவதெல்லாம் பெயரெச்சமும், வினையைத் தழுவுவதெல்லாம் வினையெச்சமுமாகும் என்றும் அறிந்துகொள்க.