உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

15

(7) பொருள்களின் தகுதி குறிக்கும் வாக்கியங்களில், நாலாம் வேற்றுமை யேற்ற பெயர்க்குப் பின்வரும் எழுவாயின் பயனிலை தொகும்.

எ-டு : மனைக்கு வேம்பு (ஏற்றது), மன்றுக்குப் புளி (ஏற்றது).

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு மண்ணாங்கட்டிப் பணியாரம்

(தக்கது).

மட்டிப்பயலுக்குத் துட்டக் குருக்கள் (தகும்). கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன் (ஏற்றவன்). கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் (ஏற்றது).

கண்ணுக்குக் கண் என்பது தண்டனையின் தகுதியைக் குறித்தது. கண்ணைக் கெடுத்தவனுக்குக் கண்ணைக் கெடுக்க வேண்டும் என்பது அதன் பொருள். கொலைக்குக் கொலை என்பதும் பழிக்குப் பழி என்பதும் தண்டனைத் தகுதி குறித்தவையே. அங்ஙனமே பிறவும்.

(8) ஒன்றுக்குள்ளது இன்னொன்றுக்கு என்னும் கருத்துப் பற்றிய வாக்கியங்களின் இறுதியில் வரும் பயனிலை தொகும்.

எ-டு : முன் ஏருக்கு வந்தது பின் ஏருக்கு (வரும்).

அவனுக்குச் சொன்னது உனக்கும் (சொன்னது).

(9) பல சிற்றளவுகள் சேர்ந்து ஒரு பேரளவாவதைக் குறிக்கும் வாக்கியங்களின் பயனிலை தொகும்.

எ-டு : துளிதுளியாய் வெள்ளம் (ஆகும்).

ஒவ்வொன்றாய் நூறா? ஒருமிக்க நூறா? = ஒவ்வொன்றாய் நூறு ஆகுமா? ஒருமிக்க நூறு ஆகுமா?

(10) இன்னதற்கு இன்னது வேண்டும் என்னும் கருத்துப்பற்றிய வாக்கியங்களின் பயனிலை தொகும்.

எ-டு : மாடத்திற்கு ஓவியம் (வேண்டும்), மாநகருக்குக் கோபுரம் (வேண்டும்).

ஆணுக்கு அறிவு (வேண்டும்), பெண்ணுக்கு அழகு (வேண்டும்).

இங்கு வேண்டுமென்றது தேவையை. தேவை வேறு, தகுதி வேறு. இவற்றின் வேறுபாடறிக. இரண்டாம் வாக்கியத்தில் வேண்டுமென்றது மிக வேண்டியதை.