உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

79

ஒருவர்கள் யார்கள் மகனார்கள் என்னும் வழக்கின்மை

காண்க.

குடிகள் மக்கள் முதலிய 'கள்' ஈற்றுப் பன்மைப் பெயர்கள், ஒற்றைப்பன்மை வினைகொண்டும் இரட்டைப்பன்மை வினை கொண்டும் முடியும்.

எ-டு : குடிகள் மகிழ்ந்தனர் (மகிழ்ந்தார்), மகிழ்ந்தார்கள்.

மக்கள் பொருதனர் (பொருதார்), பொருதார்கள்.

குறிப்பு : மகிழ்ந்தனர் பொருதனர் என 'அன்' சாரியை பெற்று வரும் வினைமுற்றுகள், அச் சாரியை பெறாத வினைமுற்றுகளினும் பன்மை யுணர்த்தற்குச் சிறந்தனவாம்.

குருக்கள் என்னும் பெயர், உண்மைப் பன்மையாயினும் உயர்வுப் பன்மையாயினும், குடிகள் என்னும் பெயர் போல் முடியும்.

எ-டு : குருக்கள் வந்தனர் (வந்தார்), வந்தார்கள்.

அடிகள் என்னும் பெயர், 'ஆர்' விகுதியை மேற் கொள்ளினும் கொள்ளாவிடினும், குடிகள் என்னும் பெயர் போன்றே முடியும். இப் பெயர் என்றும் உயர்வுப் பன்மையேயாம்.

எ-டு : அடிகள் கூறினர் (கூறினார்), கூறினார்கள். அடிகளார் கூறினர் (கூறினார்), கூறினார்கள்.

'மார்' ஈற்றுப் பன்மைப்பெயர்கள், ஒற்றைப் பன்மை வினைகொண்டும் இரட்டைப் பன்மை வினைகொண்டும் முடியும். இவை உயர்வுப் பன்மையாய் வரவே வரா.

எ-டு : குருமார் வந்தனர் (வந்தார்), வந்தார்கள். ஆசிரியன்மார் வந்தனர் (வந்தார்), வந்தார்கள். அடிகண்மார் வந்தனர் (வந்தார்), வந்தார்கள்.

ஒற்றைப் பன்மையாய் வரும் 'அர்' 'ஆர்' விகுதிகள் பெரும்பாலும் ஒருமை குறித்து உயர்வுப் பன்மையாக வழங்குதலின், அவை உலகவழக்கில் பன்மை குறிக்கத் தவறும்போது விகுதிமேல் விகுதி என்னும் இரட்டைப் பன்மை வேண்டப்படும்.

எ-டு : எல்லாரும் வந்தார்கள்.

'எல்லாரும் வந்தார்' என்பது, செய்யுள் நடைக்கும் புலவர் எழுதும் இலக்கிய நடைக்கும் ஏற்கும். 'எல்லார்களும் வந்தார்கள்' என்பது வழக்கில் இல்லை.