உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சிவன் வந்தான், சிவை வந்தாள்.

பரன் வந்தான், பரை வந்தாள். முருகன் வந்தான், வள்ளி வந்தாள்.

நான்முகன் வந்தான், கலைமகள் வந்தாள்.

திருமகன் வந்தான், திருமகள் வந்தாள்.

பாலீறு பெறாத ஆண்தெய்வப் பெயர்கள், ஆண்பால் வினைகொண்டும் உயர்வுப்பன்மை வினைகொண்டும் முடியும்.

எ-டு : திருமால் வந்தான், வந்தார். பெருமாள் வந்தான், வந்தார்.

இளமைப்பெயர் முடிபு

கைக்குழந்தையைக் குறிக்கும் குழவி குழந்தை சேய் பிள்ளை மகவு என்னும் பெயர்கள், ஒன்றன்பால் வினைகொண்டு முடியும். எ-டு : குழவி அழுகிறது, குழந்தை தவழ்கிறது, சேய் தூங்குகிறது, பிள்ளை பிறந்தது, மகவு பால் குடிக்கிறது.

குறிப்பு : குழவிப்பருவம், பிள்ளைப்பருவம், பையற்பருவம் அல்லது சிற்றிளமைப் பருவம், இளமைப்பருவம் அல்லது விடலைப்பருவம், இடைமைப்பருவம் அல்லது நடுப்பருவம், முதுமைப்பருவம் என மக்கட்பருவம் அறுதிறப்படும். அவற்றுள்: குழவிப்பருவம் ஒன்றன்பால் முடிபிற்கே யுரிய தென்றும், பிள்ளைப்பருவம் ஒன்றன்பால் முடிபிற்கும் ஆண்பால் பெண்பால் முடிபிற்கும் உரியதென்றும், ஏனைப் பருவமெல்லாம் ஆண்பால் பெண்பால் முடிபிற்கே யுரியவென்றும் அறிதல் வேண்டும்.

பகுத்தறிவுண்மையின்மை பற்றியே, பொருள்கள் உயர்திணை அஃறிணையென இருபாற் படுத்துக் கூறப்படுதலின், பகுத்தறிவு தோன்றாத குழவிப்பருவம் அஃறிணைப் பாற்பட்டதாகக் கொள்ளப்படும் என்க.

விடலைப்பருவம் எனினும் காளைப்பருவம் எனினும் ஒக்கும். குழவிப்பருவங் கடந்து பகுத்தறிவு விளங்காத சிறு பிள்ளையைக் குறிக்கும் குழந்தை பிள்ளை முதலிய பெயர்கள், பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பால் வினைகொண்டும், பருவத்திற் கேற்ப ஒன்றன்பால் வினைகொண்டும் முடியும்.

குழந்தை (பிள்ளை) வருகிறான் குழந்தை (பிள்ளை) வருகிறாள்

-

-

ஆண்பால் பெண்பால்

-

குழந்தை (பிள்ளை) வருகிறது இருபாற்பொது