உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

133

பண்டிதர் இல்லற வாழ்க்கை வள்ளுவனார் இல்லறவியலைப் பின்பற்றியதெனின் மிகையாகாது. அவர்தம் உறவினர் பலரையும் வரவழைத்து வெவ்வேறு அலுவலில் அமர்த்தினர். அவர் இரப் போர்க் கீந்த ஐயமும் (பிச்சையும்) புலவர்க் களித்த பரிசும் அளவிடற் பாலனவல்ல. வேளாண்மையும் விருந்தோம்பலும் முன்னினும் பன்மடங்கு விஞ்சின. இங்ஙனம் முனிவர் சொல் முற்றும் பலித்தது. அரசியலார் பண்டிதரின் பல்வகைத் தொண்டைக் கண்டு, அவருக்கு இராவ்சாகிபுப் பட்டம் அளித்தனர்.

15-12-1911-ல் பண்டிதரின் முதன் மனைவியார் இறந்தனர். பின்பு, 5- 2-1912-ல் அவர் நெல்லை முதலூர்க் கைலாசம் அம்மையாரை மறுமணம் புரிந்தனர். அவ் வம்மையாரும் ஏழாண்டின்பின் 14-7-1919ல் முன்னோர் வழிசென்றனர். அதனையடுத்துப் பண்டிதரும் மக்கள் புலம்பச் சுற்றம் சோரத் தமிழ்நாடு வருந்த 31-8-1919-ல் முற்றும் விளைந்த மணியா- இவ்வுலக வாழ்வை நீத்தனர்.

அவரது பூதவுடம்பு மறைந்து போயினும், புகழுடம்பு 'கருணா மிர்த சாகர' வாயிலாகவும், 'கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்' வாயி லாகவும் பொலிந்து நிற்கின்றது. அது ஒருபோதும் பொன்றாது.

பயிற்சி

பின்வருபவற்றைப் பற்றி வரலாற்றுக் கட்டுரை வரைக.

1. நீர் பாராட்டும் ஒரு புலவர். 2. காந்தியடிகள். 3. இந்தியத் தேசி யப் பேரவை. 4. இருப்புப்பாதை. 5. வானூர்தி. 6. திரைப்படம். 7. மின் சாரம். 8. உலகம். 9. ஒரு கடல்கோள். 10. ஓர் எரிமலைப் பொங்கல். 11. ALDIT. 12. காசுமீரத் தொல்லை. 13. அரசியல். 14. இரண்டாம் உலகப் பெரும்போர். 15. ஒரு புறப்போக்கு (Excursion). 16. ஒரு நிலக் கண்டுபிடிப்பு.

2. வரணனைக் கட்டுரை

கோடைக்கானல்

கோடைக்கானல், மதுரை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த பழனிமலைத் தொடர்ச்சியில் கடல் மட்டத்திற்கு 7000 அடிக்கு மேற்பட்ட ஒரு நகராண்மையூர்.

தற்போது, கோடைக்கானல் ஓர் உடல்நல நிலையமாகவே பயன்படுத்தப்பெற்று வருவதாலும், பெருமக்கள் கோடைக்காலத்தில் அங்குக் குளிர்ச்சிக்குச் செல்வதாலும், கானல் என்பது சோலை என்னும்