உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

157

நோக்காத கல்வி வேறு ஆதலால், ஆங்கிலத்திற்போன்றே தமிழிலும் தேர்ச்சிபெற விரும்பு வார், அதற் குரிய தேர்வுகளைத் தேறல் வேண்டும். இல்லாவிட்டால் அவர்களைச் சிறப்பாக மதித்தலும் அவர்கட்கு

அலுவலளித்தலும் கூடாது.

தகுந்த இலக்கண விலக்கியப் பயிற்சி யிருந்தாலன்றித் திருந்திய கருத்துத் தோன்றாதாகலின், மறுமலர்ச்சியாள ரெல்லாம் அதைப் பெறும் வரை, அதைப் பெற்றவரின் வழியே நிற்றல் வேண்டும். பயிற்சிக்கும் தேர்விற்கும் விலகியோடிப் பல குறுக்குவழிகளில் எழுத் தாளரும் மொழிநடை யதிகாரிகளுமாகப் பெயர்பெற விரும்புவது, தலைக்கடைக் கதவை யுடைத்தும் புறக்கடை வழியா-க் குதித்தும் ஒரு வீட்டிற்குள் திருட்டுத்தனமா-ப் புகுவதையே ஒக்கும். அத்தகை மறுமலர்ச்சி யெல்லாம் மறுவின் மலர்ச்சியே (வழுவின் விரிவே). ஆதலால், பல்லிலக்கியமும் தொல்லிலக்கணமும் பயின்று அதற் கேற்ப மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க நெறிப்பட்ட இலக்கண விலக் கியப் பயிற்சியில்லாத எழுத்தாளரெல்லாம் எழுத்தை ஆள்பவரே (Alphabetmen) யன்றி இலக்கியத்தை ஆள்பவரல்லர்.

ii. பழிகரப்பங்கதம்

குடியின் பெருமை

இவ் வுலகத்தில் மிகப் போற்றப் படவேண்டிய செயல்களுள் குடியும் ஒன்றாகும். ஒருசிலர் இதன் பெருமையை உணர்வதில்லை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத காற்று நீர் உணவு ஆகிய முப்பொருளையும் உட்கொள்ளுதல், முறையே, உயிர்ப்பு (மூச்சு விடுதல்) குடிப்பு உண்பு எனப்படும். குடிப்பு என்னும் விகுதிபெற்ற தொழிற்பெயர், குடி என முதனிலைத் தொழிற்பெயராகவும் நிற்கும். "நீரின்றமையா துலகம்." இயல்பான வெறுநீரே இத்துணைச் சிறப் புடையதாயின், அருஞ்சத்துகளையுடைய மதுநீர் எத்துணைச் சிறப்புடையதா யிருத்தல் வேண்டும்! தண்ணீர் போன்றே கண்ணீரும் (கள் நீர்) உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தென்பதை உணர்த்தற்கே, அதனை யுட்கொள்வதை வேறு சொல்லாற் குறியாது குடி யென்னும் சொல்லாலேயே குறித்தனர் மூதறிஞர். யூதரும் பிற மக்களும் மதுநீரைக் குடிநீராகவே பயன்படுத்தி

சில