உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

183

தெரியாத ஒரு சொல்லையும் விட்டுவிடல் கூடாது. ஒரு சொல்தானே யென்று விட்டுவிடின், முழுப்பகுதியின் பொருளும் விளங்காமற் போகலாம்; அல்லது பிறழ உணரப்படலாம்.

வீட்டுப் பயிற்சிகளில், அருஞ்சொற்கட் கெல்லாம் அகராதியைப் பார்த்துப் பொருள் தெரிந்துகொள்ளல் வேண்டும். அறிஞரைக் கேட்டுத் தெரிந்துகொள்வதினும், அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொள்வதே நல்ல பழக்கமாகும். பிறவகையிற் பொருள் தெரிந்து கொள்வதெல் லாம், சோம்பேறித்தனத்தையும் கவலையின்மையையுமே காட்டும்.

வகுப்புப் பயிற்சிகட்குக் கையகராதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தேர்வு விடையெழுதும் போது, அருஞ்சொற் பொருளை இடம் நோக்கியும் முன்பின் வரும் சொற்சார்பு கொண்டும் ஊகித்தறிந்து கொள்ளுதல் வேண்டும்.

(3) பொருள் முற்றும் உணர்ந்தபின், அதற்கேற்ற தலைப்பு அமைத்தல் வேண்டும். அது சுருக்கமாகவும் முழுப் பகுதியையுந் தழுவுவதாகவும் இருத்தல் வேண்டும்.

(4) பின்பு சுருக்கிவரைதற்கு வேண்டிய முக்கியமான குறிப்பு களை அல்லது கூறுகளை, முக்கியமல்லாதவற்றினின்று பிரித் துணர்ந்து கொள்ளுதல் வேண்டும். முக்கியமானவற்றை மூலத்திற் கோடிட்டுக் குறித்துக் கொள்வதைவிட, தனியாக எழுதிக் குறித்துக் கொள்வதே நல்லது.

(5) பின்னர்,உரைநடைப் பகுதியின் அளவையும் சொல் லெண்ணிக்கையையும் கவனித்து, அதில் மூன்றிலொரு பங்காக அமையுமாறு, சுருக்கிவரையத் தொடங்குதல் வேண்டும். சொல் லெண்ணிக்கையைக் கவனிப்பதைவிட வரி யெண்ணிக்கையைக் கவனிப்பது, சிலர்க்கு வசதியாயிருக்கலாம்.

மாணவர்க்குப் பெரும்பாலும் முதன் முறையிலேயே திருத்த மா- எழுத முடியாதாதலின், முதலாவது கரட்டு வரைவு வரைந்து கொள்வது நல்லது.

சுருக்கி வரையும்போது கவனிக்க வேண்டியவை

(i) சுருக்கி வரைவு, மாணவனின் சொந்த நடையில் அல்லது சொந்தச் சொற்களைக் கொண்டு அமைதல் வேண்டும். மூலவுரை நடைப் பகுதியிலுள்ள வாக்கியங்களையே தொகுத்து வரைதல் கூடாது.