உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

71

கொண்டிருந்தது. இது எதிர்க்கட்சிக்குச் சார்பாகவும் எங்கள் கட்சிக்கு மாறாகவு மிருந்ததினால், எதிர்க்கட்சியார் மிக விரைவில் கோல் போடத் தொடங்கி, அரைமணி நேரத்திற்குள் ஆறு கோல் போட்டு விட்டார்கள். எங்கள் கட்சியார் கோல் வாங்கினார்களே யொழிய, ஒன்றுகூடப் போட முடியவில்லை.

பின்பு, அரைவேளை வந்தது. பிற்பாதியில், காற்றடிக்கும் பக்கத்திற்கு எதிர்க் கட்சியார் போனபின், எங்கள் கட்சியார் கடனையுங் கழித்து மேற்கொண்டும் கோல் போடுவார்கள் என எண்ணி, ஐந்து நிமையம் ஒருவாறு மகிழ்ந்திருந்தோம்.

ஆயின், மீண்டும் விளையாட்டுத் தொடங்கியவுடன், காற்று நின்று விட்டது. அப்போதே எங்கட்குக் கலக்கம் பிறந்துவிட்டது. அதோடு, பத்து நிமையங் கழித்து, 'பட்ட காலிலே படும், கெட்ட குடி யே கெடும்' என்னும் பழமொழிப்படி, எங்கள் கட்சித் தலைவனும் தேர்ச்சி பெற்ற காற்பந் தாடகனுமாகிய ஆளவந்தான், அண்மையில் கடுநோ-பட்டுத் தெளிந்தவனாதலால், திடுமென்று மயங்கிக் கீழே விழுந்துவிட்டான். அன்றே எங்கள் அரைநம்பிக்கையும் போ- விட்டது. அவனுக்குப் பதிலியாக (substitute) வந்த வெற்றிவேலோ, நேற்றுவரை எந்தப் பந்தயத்திலும் விளையாடினதுமில்லை; விளை யாடத்தக்கவன் என்று கருதப்பட்டதுமில்லை. நேரம் கால் மணிதான் இருந்தது. எங்கட்கு ஏக்கம் முன்னினும் பன்மடங்கு மிகுந்துவிட்டது. ஆயினும், காரிருளில் பளீர் என ஒளிவீசும் மின்னல்போல், ஒரு நிமையத்திற்குள் வெற்றிவேல் ஒரு கோல் போட்டான். எங்கள் முகத்தில் சிறிது களை தோன்றிற்று. அதன்பின் அடுத்த நிமையத்தில் இன் னொன்று போட்டான். எங்கட்குக் கலக்கம் முற்றுந் தீரவில்லை யாயினும், எங்கள் நம்பிக்கை எழத் தொடங்கிற்று. பின்பு, வெற்றி வேல் மிக வூக்கங்கொண்டு மின்னல் வேகத்தில் விளையாடி, எதிர்க் கட்சியார் மருள்கொண்டவர்போல் மனந்தடுமாறவும், கண்டாரெல் லாம் இடை விடாது ஆரவாரித்துக் கைதட்டவும், எதிர்க்கட்சிக் கோல்காப்போன் பந்தை எற்ற எற்ற உடனுடன் திருப்பி யெற்றி, பத்து நிமையத்திற்குள் நாலுகோல் போட்டது, மந்திரமோ மாயமோ என்று எண்ணுதற் கிடமா யிருந்தது.

இந்த ஆட்டத்தை நீ பார்க்கவில்லையே என்பதுதான் என் வருத்தம். இங்ஙனம் ஆறு கோல் போட்டுக் கடனை முற்றுங் கழித்து விட்டது மட்டுமா? விளையாட்டு முடிவதற்கு ஒரு நொடியிருந்த போது,