உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இயற்றமிழ் இலக்கணம்

4. சினையாகு பெயர்: சினையாகு பெயராவது ஒரு சினை (உறுப்பு) யின் பெயர் அச் சினையையுடைய உடம்பிற்கு ஆகிவருவது. இது பொரு ளாகு பெயர்க்கு எதிர்.

உ-ம்.

வெற்றிலை நட்டான் - இதில் வெற்றிலை என்னும் சினைப் பெயர் அதனையுடைய கொடிக்கு ஆகிவந்தது.

5. குணவாகு பெயர்: குணவாகு பெயராது ஒரு குணத்தின் பெயர் அக் குணத்தையுடைய பொருளுக்கு ஆகிவருவது. இது பண்பாகுபெய ரென்றுங் கூறப்படும்.

உ-ம்.

வண்ணான் வெள்ளை கொண்டு வந்தான் - இதில் வெள்ளை யென்னும் குணப்பெயர் அக் குணத்தையுடைய உடுப்பிற்கு ஆகிவந்தது.

6. தொழிலாகு பெயர்: தொழிலாகுபெயராவது ஒரு தொழிலின் பெயர் அத் தொழியுடைய பொருளுக்கு ஆகிவருவது.

உ-ம்.

பறவை பறவை (பறத்தல்) என்னும் தொழிற்பெயர் அத் தொழிலையுடைய பிராணிக்கு ஆகிவந்தது.

7. அளவையாகு பெயர்: அளவையாகு பெயராவது ஓர் அளவின் பெயர் அவ் வளவையுடைய பொருளுக்கு ஆகி வருவது.

அளவு எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப்படும்.

i. எண்ணலளவையாகு பெயர்: அரையில் உடுத்தான் இதில் அரை யென்னும் எண்ணலளவுப்பெயர் அதையுடைய உறுப்பிற்கு ஆகிவந்தது.

ii. எடுத்தலளவையாகு பெயர்: ஒரு சேர் வாங்கினான் - இதில் சேர் - என்னும் எடுத்தலளவுப்பெயர் அவ் வளவையுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது.

iii. முகத்தலளவையாகு பெயர்: உண்பது நாழி - இதில் நாழி என் னும் முகத்தலளவுப் பெயர் அவ்வளவையுடைய அரிசிக்கு ஆகிவந்தது.

iv. நீட்டலளவையாகு பெயர்: உடுப்பது நான்கு முழம் - இதில் முழம் என்னும் நீட்டலளவுப் பெயர் அவ் வளவையுடைய ஆடைக்கு ஆகிவந்தது.

8. சொல்லாகு பெயர்: சொல்லாகு பெயராவது சொல்லின் பெயர் அச் சொல்லின் பொருளுக்கு ஆகி வருவது.

உ-ம்.

குறளுக்கு உரை கூறினான் -இதில் உரை என்னும் சொல்லின் பெயர் அதன் பொருளுக்கு ஆகி வந்தது.