உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

உள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப் பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத் தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து”

(நெடுநல். 115-128)

நிலத்தின்மேலோடு வண்டியும் தேரும் போன்றே நீர்மேலோடும் மரக்கலங்களும், முதன் முதல் தமிழ் நாட்டில்தான் செய்யப் பெற்றன. ஓடம் செய்பவனுக்கு ஓடாவி (ஓடாள்வி) என்றும், நாவாய் போன்ற பெருங்கலம் செய்பவருக்குக் "கலஞ்செய் கம்மியர்” (மணி. 25:124); "கலம்புணர் கம்மியர்” (மணி. 7: 70) என்றும், பெயர். இவர் கப்பல் தச்சர்.

கலத்தையுடைய நெய்தல் நில மக்கள் கலவர், கலத்தை ஓட்டும் தலைவன் நீகான் (நீகாமன், மீகாமன் மீகான் (captain). கலத்தில் வினை செய்பவர் ஓசுநர் (sailors) கலத்திற் சென்று வாணிகம் செய்பவன் கடலோடி.

"திரைகட லோடியும் திரவியம் தேடு."

என்று ஔவையார் கூறியது காண்க.

"கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்"

என்று மணிமேகலை (21:120) கூறுவதால், தெய்வ உருவத்தை வைத்திருக்கும் பெருந் தேரும் அக்காலத் திருந்திருக்கலாம்.

இக்காலத்துள்ள தேர்களுள் திருவாரூர்த் தேர் மிகப் பெரிது. அதுவும் அரையே யரைக்கால் தேரென்றும், முன்பு எரிந்து போனது முக்கால் தேரென்றும், கூறுவர். அங்ஙனமாயின், அதற்கும் முன்பே முழுத்தேர் இருந்திருத்தல் வேண்டும். முழுத்தேர் ஏழுதட்டும் முக்கால்தேர் ஐந்து தட்டும் அரைத் தேர் மூன்றுதட்டும் உள்ளவனாகச் சொல்லப்படும். இவை முறையே நூறடியும், எழுபத்தைந்தடியும் அறுபதடியும் உயரமுள்ளன என்பர்.

"மன்னார்குடி மதிலழகு...மனையழகு, திருவாரூர்த் தேரழகு, திருவிடைமருதூர்த் தெருவழகு” என்றொரு பழமொழி வழங்கு கின்றது.

வானளாவும் கோபுரங்கள் கட்டப் பட்டிருந்த பண்டைக் காலத்தில், மாபெருந் தேர்கள் செய்யப் பட்டிருந்ததில் வியப்பில்லை.