உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கழிபெரு மூப்பினால் உடல் வற்றிக் கூன் விழுந்து படுகிடையிற் புறளவும் இயலாத மக்களை வைத்துப் பாதுகாப்பதும், உயிர் நீங்கியபின் அப்படியே கொண்டுபோய் இடுகாட்டில் கவிழ்த்து வைப்பதும், இறந்த போர் மறவர் உடல்களை இட்டு வைப்பதுமான முதுமக்கள் தாழி என்னும் மாபெருமிடா அக்காலத்தில் வனையப்பட்டது.

66

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே

......

வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி அகலி தாக வனைமோ..."

என்னும் முதுபாலைச் செய்யுள் (புறம்.256), இருவருடலைக் கொள்ளத் தக்க முதுமக்கள் தாழியும் அக்காலத்திற் செய்யப்பட்டமையை உணர்த்தும். 6. பிறதொழில்கள்

பாய் நெசவும் முடைவும், தையல், தோல்பதனிடல், செருப்புத் தைத்தல், தோலுறை செய்தல், பெட்டி சுளகு (கூடை முறம்) முடைதலும் பின்னுதலும், கட்டிற் பின்னுதல், துணியாலும் நெட்டியாலும் பல் வேறு கவர்ச்சிப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் அணிகளும் செய்தல், வண்ணம் பூசுதல், வண்ண ஓவியம் வரைதல், மண்பாவை செய்தல், நறு மணப்பொருள் கூட்டுதல், சுண்ண மிடித்தல், செக்காட்டுதல், ஆடை வெளுத்தல், மாலை கட்டுதல், சங்கறுத்தல், பவழமறுத்தல், மணி கோத்தல், மீன் பிடித்தல், முத்துக் குளித்தல், உப்பு விளைத்தல், கள்ளிறக்குதல், கள் சமைத்தல், ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல், தயிர் கடைதல், வேட்டை யாடுதல், கொடிக்கால் வைத்தல், சாணைக்கல் செய்தல், பல்வகைச் சிற்றுண்டி செய்தல், குயிலுவக் கருவிகள் (பல்வேறு இசைக் கருவிகள்) செய்தல் முதலியன.

11. வாணிகம்

நாகரிக மக்கள் வாழ்க்கைக்கு, உணவு போன்றே உடை, கலம், உறையுள், ஊர்தி முதலிய பொருள்களும், பொன் வெள்ளி முதலிய செல்வமும், இன்றியமையாதிருப்பதால், பொருளாட்சித் துறையில், ஒரு நாட்டின் நல் வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது உழவுத் தொழிலென்றும், அதற்கடுத்தவை இயற்கையும் செயற்கையுமான விளை பொருட்களாற் செய்யப்படும் பல்வேறு கைத்தொழில்களென்றும், அவற்றிற் கடுத்தது நிலவழியும் நீர்வழியும் நடத்தப்பெறும் வணிகமென்றும், பண்டைத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். அதனால், மூவேந்தரும் இருவகை வணிகத்தையும் ஊக்குதற்குச் சாலைகளும் துறைமுகங்களும் அமைத்தும், அவற்றைப் பாதுகாத்தும் வந்தனர்.